தனியார் நிறுவன உரிமையாளர் கைது
கடலூர் பெண்ணிடம் பணம் மோசடி செய்த புதுச்சேரியை சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம்:
கடலூர் கே.டி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் அனிதா (வயது 39). இவர் தனக்கு சொந்தமாக விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த கூனிமேடு பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் இடம் வாங்குவதற்காக முன்பதிவு செய்தார். அதற்கு முன்பணமாக ரூ.3 லட்சத்தை செலுத்தினார்.
பின்னர் அந்த இடத்தில் கட்டிடம் கட்டுவதற்காக சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ரூ.57 லட்சம் கடன் வாங்குவதற்காக அனிதா விண்ணப்பித்தார். இதில் ரூ.40 லட்சத்தை அந்த தனியார் நிறுவனத்தின் உரிமையாளரான புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டையை சேர்ந்த ஜெயச்சந்திரன் (46) என்பவர் தனது அனுமதி கடிதத்தின் மூலம் பெற்றுக்கொண்டு இதுநாள் வரையிலும் அந்த கடனுக்கு உரிய வட்டியை சரியான நேரத்தில் செலுத்தாமல் இருந்துள்ளார். இதனால் அனிதா, அந்த இடம் தனக்கு வேண்டாம் என கூறிய பின்னரும் ஜெயச்சந்திரன், அந்த கடன் தொகையை திருப்பி செலுத்தாமல் இருப்பதோடு அனிதாவின் வங்கி கணக்கை வராக்கடனாக்கி கிரெடிட் மதிப்பெண்ணை குறைக்கும் மோசடி செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதுகுறித்து அனிதா, விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு இருதயராஜ் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயச்சந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.