மயான பாதைக்காக தனியார் நிலத்தை கையகப்படுத்தக்கூடாது
ஜருகு கிராமத்தில் மயானத்திற்கு செல்லும் பாதைக்காக தனியார் நிலத்தை கையகப்படுத்த கூடாது என்று கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இந்த கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் 427 மனுக்கள் கொடுத்தனர். இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
மயான பாதை
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலுகா மானியதஅள்ளி அஞ்சல் ஜருகு கிராமத்தைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில், ஜருகு கிராமம் அம்பேத்கர் காலனியில் 300- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். எங்கள் காலனியில் யாராவது இறந்தால் அவர்களின் உடல்களை மயானத்திற்கு கொண்டு செல்ல ஒரு குறிப்பிட்ட பாதையை கடந்த நான்கு, ஐந்து தலைமுறைகளாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது ஒரு தனியாருக்கு சொந்தமான நிலத்தை மயானத்திற்கு செல்லும் பாதையாக மாற்ற சில அதிகாரிகள் முயற்சிக்கிறார்கள். இவ்வாறு அதிகாரிகள் புறம்போக்கு நிலமாக மாற்ற முயற்சிக்கும் பாதையில் ஒரு கிருஸ்துவ பேராலயம் கட்டி வழிபாடு செய்து வருகிறார்கள். எனவே மயானத்திற்கு செல்லும் பாதைக்காக தனியார் நடத்தை கையகப்படுத்த கூடாது. இந்த முயற்சியை அரசு கைவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பு
தர்மபுரி வெண்ணாம்பட்டி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த கோரிக்கை மனுவில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சுமார் 3 ஆயிரம் வீடுகள் உள்ளன. இதில் நெடுஞ்சாலைத்துறை மூலம் 60 அடி அகல தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. சாலையின் இருபுறமும் வீடுகள் மற்றும் கடை உரிமையாளர்கள் அத்துமீறி ஆக்கிரமித்துள்ளனர். இதனால் தற்போது சாலை குறுகலாக மட்டுமே உள்ளது. இந்த சாலையில் செல்லும் பள்ளி குழந்தைகளின் வாகனங்கள் மற்றும் பொதுமக்களும் சென்று வர மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் இந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. இந்த சாலையில் இருக்கும் பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்யும் பணியும் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே எங்களது பகுதியில் உள்ள சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி 60 அடி அகல சாலையை, பொதுமக்கள் இடையூறின்றி பயன்படுத்துவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.