தனியார் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலெக்டரிடம் மனு


தனியார் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலெக்டரிடம் மனு
x

பாதுகாப்பு வழங்கக்கோரி தனியார் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலைப்பள்ளி, சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. பள்ளிகளின் சங்க தலைவர் சீ.ராமானுஜம், செயலாளர் ஏலகிரி செல்வம், பொருளாளர் மணி, மாநில செய்தி தொடர்பாளர் செந்தில்குமார், குங்கும் ஜி.குமரேசன் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நேற்று காலை திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தனர்.

அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் மெட்ரிக் பள்ளியில் நிகழ்ந்த வன்முறைபோல் மற்ற இடங்களில் நிகழ்வதை தடுக்க தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள சக்தி பள்ளிக்கு நீதியும், இழப்பிற்கு நிவாரணமும் வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக கூறினார்.

இதனிடையே திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என தனியார் பள்ளி கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. மாவட்டத்தில் மொத்தம் 192 தனியார் பள்ளிகள் உள்ளது அதில் 146 பள்ளிகள் வழக்கம் போல இயங்கியது. 46 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story