கடலூர்: தனியார் பள்ளி பஸ் வயலில் கவிழ்ந்து விபத்து - 5 மாணவ-மாணவிகள் காயம்
ராமநத்தம் அருகே தனியார் பள்ளி பஸ் வயலில் கவிழ்ந்த விபத்தில் 5 மாணவ-மாணவிகள் காயம் அடைந்தனர்.
ராமநத்தம்,
கடலூர் மாவட்டம் பாசார் அருகே தனியார் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் ஆயிரத்திற்கு அதிகமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் இன்று 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பு நடைபெருவதால் காலை 8 மணிக்கு நிதிநத்தம், குமாரை, பெருமுளை, சிறுமுளை ஆகிய பகுதிகளில் இருந்து 20-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளி பஸ் வந்து கொண்டிருந்தது.
இந்த பஸ்சை முத்தழகன் ரவிச்சந்திரன்(வயது30) என்பவர் ஓட்டிவந்தார். கனகம்பாடி பேருந்து நிறுத்தம் அருகே பஸ் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள வயலில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 5-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு சிறு காயங்களுடன் தப்பினர். இதனை அறிந்த அப்பகுதியினர் பஸ்சுக்குள் சிக்கியிருந்த மாணவர்-மாணவிகளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.