ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டியவர்களுக்கு பரிசு
சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டியவர்களுக்கு கலெக்டர் கார்மேகம் பரிசு வழங்கினார்.
சேலம் 5 ரோடு பகுதியில் நேற்று சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். இதையொட்டி வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதில் ஹெல்மெட், சீட்பெல்ட் அணிவது, வாகனம் ஓட்டும் போது செல்போன் பயன்படுத்த கூடாது, குடிபோதையில் வாகனம் ஓட்ட கூடாது என்பன உள்ளிட்ட சாலை பாதுகாப்பு விதிமுறைகள் கூறப்பட்டுள்ளது.
மேலும் அந்த வழியாக ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு கலெக்டர் கார்மேகம் பரிசு வழங்கி பாராட்டினார். இதையடுத்து போக்குவரத்து போலீசாரின் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சேலம் சரக போக்குவரத்து துணை கமிஷனர் பிரபாகரன், மாநகர போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கல்யாண்குமார் (சேலம் கிழக்கு), ராஜராஜன் (மேற்கு) மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.