அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் ஊராட்சிகளுக்கு பரிசுகலந்தாய்வு கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் பேச்சு


அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் ஊராட்சிகளுக்கு பரிசுகலந்தாய்வு கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் பேச்சு
x

அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் ஊராட்சிகளுக்கு பரிசு வழங்கப்படும் என்று கலந்தாய்வு கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் கூறினார்.

சேலம்

சேலம்,

கலந்தாய்வு கூட்டம்

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு, கிராம ஊராட்சி நிர்வாகம் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் சேலம் கோட்டை பல்நோக்கு அரங்கில் நேற்று நடந்தது. இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் பேசியதாவது:-

கிராம ஊராட்சிகளில் நடைமுறைப்படுத்தப்படும் இணையவழி வரிவசூல், இணையவழி மனைப்பிரிவு ஒப்புதல் வழங்குதல், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் போன்ற முக்கிய திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசு மேற்கொள்ளும் முயற்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

வளர்ச்சி திட்டப்பணிகள்

தமிழ்நாடு அரசின் வளர்ச்சி திட்டப் பணிகளை தங்களது ஊராட்சிகளுக்கு முழுமையாக பயன்படுத்திக்கொண்டு பொதுமக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் பூர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்போதைய டிஜிட்டல் சூழலில் அரசு அலுவலகங்களின் சேவைகள் பெருமளவில் இணையதள வழியில் கிடைக்கிறது. எனவே, இணையதள சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக போதுமான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.

இளைஞர்களின் விளையாட்டுத்திறனை ஊக்குவிக்கும் வகையில் அந்தந்த ஊராட்சி பகுதிகளில் விளையாட்டுப் போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மேலும், கிராம சாலை மேம்பாட்டுத்திட்டம், ஜல் ஜீவன் இயக்கம் போன்ற திட்டங்களையும் முழுமையான பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக, தங்களது பகுதிகளில் சுகாதாரத்தை பேணும் வகையில், பொதுக் கழிப்பிடங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், தங்களது ஊராட்சிகளில் தேங்கும் குப்பைகளை நாள்தோறும் அப்புறப்படுத்தி சுத்தம் செய்து, சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்துக் வேண்டும்.

ஊராட்சிகளுக்கு பரிசு

சேலம் மாவட்டத்தில் முதற்கட்டமாக, ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள ஒரு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளை மாதிரிப் பள்ளிகளாக மேம்படுத்த அப்பள்ளிகளில் சுற்றுச்சுவர் அமைத்தல், குடிநீர் வசதிகள் மற்றும் கழிப்பறை வசதிகளை பராமரித்தல் போன்ற பணிகள் முன்னெடுக்கப்படும்.

அரசின் திட்டங்களை செயல்படுத்துவது உள்பட அனைத்து செயல்பாடுகளிலும் சிறந்த ஊராட்சியாக தங்களது ஊராட்சிகள் அமைவதற்கு ஊராட்சி மன்ற தலைவர்கள் செயல்பட வேண்டும். அவ்வாறு சிறப்பாக செயல்படும் ஊராட்சிகளையும், ஊராட்சிமன்ற தலைவர்களையும் ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட அளவில் பரிசுகள் வழங்கப்படும். அரசின் திட்டங்கள் அனைத்தும் அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும். அதில் எவ்வித பாகுபாடு இல்லாமல் இருப்பதை ஊராட்சி மன்ற தலைவர்கள் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பாலச்சந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, வேளாண்மை இணை இயக்குநர் சிங்காரம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார், மகளிர் திட்ட இயக்குனர் பெரியசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) தமிழரசி, உதவி இயக்குனர் (தணிக்கை) ராமஜெயம் உள்பட ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story