பேச்சு, கவிதை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு


பேச்சு, கவிதை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
x
தினத்தந்தி 5 Oct 2023 6:45 PM GMT (Updated: 5 Oct 2023 6:46 PM GMT)

பேச்சு, கவிதை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பரிசு வழங்கினார்.

விருதுநகர்

சிவகாசி

தமிழ் கனவு மாநாடு

தமிழ் இணைய கல்விக் கழகத்தின் சார்பில், கல்லூரி மாணவ- மாணவிகளிடையே தமிழர்களின் மரபையும், தமிழ் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் தமிழ் கனவு பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சிகள் மாவட்டந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழக அரசின் தமிழ் இணைய கல்விக்கழகம் சார்பில் தமிழ் வளர்ச்சி பற்றிய தமிழ்க்கனவு என்ற மாநாடு சிவகாசி பி.எஸ்.ஆர். என்ஜினீயரிங் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.

பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் சோலைசாமி தலைமை தாங்கினார். கல்லூரியின் இயக்குனர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக தமிழக முன்னாள் காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு, விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் கலந்து கொண்டு பேசினர்.

வெற்றி பெற முடியும்

நிகழ்சியில் வரலாறு படைப்போம் என்ற தலைப்பில் சைலேந்திரபாபு பேசியதாவது,

இந்த மாபெரும் தமிழ்க் கனவின் நோக்கமே மாணவர்கள் சக மனிதர்களையும் தங்களின் மனதையும் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான். வாழ்வில் நோக்கம், லட்சியம், கனவு இருந்தால் வெற்றி பெற முடியும். கல்வி மிகப் பெரிய ஆயுதம் அதை சிறந்த முறையில் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும். நாம் காணும் கனவு பெரியதாக இருந்தால் மட்டுமே அதில் ஒரு பகுதியையாவது நிறைவேற்ற முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கல்லூரி களில் இருந்து 2,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பரிசுகள்

நிகழ்ச்சியின் இறுதியில் தமிழ் வளர்ச்சித் துறையின் கவிதைப் போட்டி, மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் கல்லூரியின் முதல்வர் செந்தில்குமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை, விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தினர், பி.எஸ்.ஆர். கல்லூரி நிர்வாகம், பேராசிரியர்கள் மாரிச்சாமி, பிச்சிப்பூ மற்றும் பாலசுப்ரமணியன் செய்திருந்தனர்.


Related Tags :
Next Story