அரசு ஊழியர் சங்கத்தினர் ஊர்வலம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி அரசு ஊழியர் சங்கத்தினர் ஊர்வலம்
மயிலாடுதுறையில் அரசு ஊழியர் சங்கத்தினர் சார்பில் கோரிக்கை ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சிவபழனி தலைமை தாங்கினார். செயலாளர் இளவரசன் முன்னிலை வகித்தார். முன்னாள் மாநில செயலாளர் பிரேம்சந்திரன் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். மயிலாடுதுறை உதவி கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கிய ஊர்வலமானது கண்ணாரத்தெரு, சின்னகடைவீதி, மாயூரநாதர் கீழவீதி வழியாக கலெக்டர் அலுவலகத்தை சென்றடைந்தது. பின்னர் அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில், மாநில செயலாளர் கோதண்டபாணி, மாவட்ட தலைவர் தென்னரசு, செயலாளர் ஜெயராமன், மாநில துணைத்தலைவர் தர்மராஜ், ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் பழனிவேலு உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அனைத்து ஒப்பந்த, வெளிமுகவை மற்றும் தினக்கூலி ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். அரசாணை 153,139,115 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். முடிவில் மாவட்ட பொருளாளர் கலா நன்றி கூறினார்.