பேராசிரியர்கள், தொழிலாளர்கள் பறை அடித்து ஆர்ப்பாட்டம்


பேராசிரியர்கள், தொழிலாளர்கள் பறை அடித்து ஆர்ப்பாட்டம்
x

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் முறைகேடுகள் நடப்பதாகவும், அதனை கண்டித்தும் பேராசிரியர்கள் மற்றும் தொழிலாளர்கள் பறை அடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்

பணி நீக்கம்

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா திருவலத்தை அடுத்த சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 75-க்கும் மேற்பட்ட கலை அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் 66 பேர் 2013-ம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டனர். கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, அவர்களுக்கு பணி வழங்கவும், பணி நிரந்தரம் செய்யவும் கோர்ட்டு உத்தரவிட்டும் இதுவரையில் கோர்ட்டு உத்தரவை பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது.

பறை அடித்து ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில் 66 பேருக்கும் உடனடியாக பணி வழங்க வேண்டும், பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து முறைகேடுகளில் சிக்கியுள்ளதால் மாணவர்கள் பாதிக்கபடுகின்றனர். இதற்கென அமைக்கப்பட்ட விசாரணைக் குழு விசாரணை நடத்தி 12 மாதங்களாகியும் இன்னும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக்கோரி திருவள்ளுவர் பல்கலைக்கழகம் முன்பு பறை அடித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு தொழிலாளர்கள் சங்கத்தின் கவுரவ தலைவரும், முன்னாள் ஆட்சிமன்ற குழு உறுப்பினருமான இளங்கோவன் தலைமை தாங்கினார். பேராசிரியர் குமார் தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் பேராசிரியர்கள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியிடும்போது தேர்வு எழுதாதவர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண் வழங்குவது, தேர்வு எழுதிய மாணவர்களின் முடிவுகளை நிறுத்தி வைத்தல், இறந்து போன பேராசிரியர்களை விடைத்தாள் திருத்த அழைத்தது போன்ற பல்வேறு குளறுபடிகளில் சிக்கியுள்ளது என்று கூறி, அதனை கண்டித்து பறையடித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

துணைவேந்தர் விளக்கம்

இதுகுறித்து திருவள்ளுவர் பல்கலைக்கழக துணை வேந்தர் ஆறுமுகம் கூறுகையில், அம்பேத்கர் இருக்கை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு நிதி அளித்தவுடன் அம்பேத்கர் இருக்கை அமைக்கப்படும். மேலும் சில மதிப்பெண் பிரச்சினை உள்ளது. அதனை கல்வித்துறைக்கு அனுப்பி சரி செய்ய உள்ளோம். மூன்றாமாண்டு மாணவர்களின் தேர்வு முடிவுகளை முன்கூட்டியே வெளியிட்டுள்ளோம். சில மாணவர்கள் தேர்வு எண்ணை சரியாக எழுதாததால் அவர்களின் முடிவுகளை நிறுத்தி வைத்துள்ளோம். கடந்த 10 மாதங்களில் எந்த தவறும் நடக்கவில்லை.

வெளியாட்கள் யாரையும் நாங்கள் பணிக்கு அமர்த்தவில்லை. பல்கலைக்கழக பணியாளர்கள் மட்டும் பணி செய்கின்றனர். தேர்வு விடைத்தாள்கள் திருத்த பல்கலைக்கழக பேராசிரியர்களை மட்டுமே பயன்படுத்துகிறோம் என கூறினார்.


Next Story