கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு:ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்புகாவிரி ஆற்றில் பரிசல் இயக்க தடை


கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு:ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்புகாவிரி ஆற்றில் பரிசல் இயக்க தடை
x
தினத்தந்தி 17 Aug 2023 1:00 AM IST (Updated: 17 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பென்னாகரம்:

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

தமிழ்நாட்டிற்கு கர்நாடகம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி ஜூன், ஜூலை மாதங்களுக்கான 44 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி) தண்ணீரை திறக்கவில்லை. இதையடுத்து தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. காவிரியில் தண்ணீர் திறக்கும்படி கர்நாடகத்திற்கு உத்தரவிடுமாறு தமிழகம் கோரியுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. அதே நேரத்தில் கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து உள்ளது. இதன் காரணமாகவும் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

தண்ணீர் திறப்பு

இந்த நிலையில் காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படும் அந்த மாநில அரசு அறிவித்தது. இதையடுத்து கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய இரு அணைகளில் இருந்தும் மொத்தம் வினாடிக்கு 14 ஆயிரத்து 136 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் திறந்து விடப்பட்ட இந்த தண்ணீர் நேற்று மதியம் ஒகேனக்கல்லை வந்தடைந்தது. கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. அதன்படி மதியம் 2 மணி நிலவரப்படி வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்தது.

பரிசல் இயக்க தடை

நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால் தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது. இதனால் நேற்று ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

மேட்டூர் அணை

கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் மேட்டூர் அணையை இன்று (வியாழக்கிழமை) வந்தடைய வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 53.38 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 1,452 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலையில் வினாடிக்கு 552 கனஅடியாக குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story