3 உரக்கடைகளில் விற்பனைக்கு தடைவேளாண் அதிகாரிகள் நடவடிக்கை
தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் 3 உரக்கடைகளில் விற்பனைக்கு தடை விதித்து வேளாண் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
திடீர் ஆய்வு
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தனியார் உரக்கடைகளில் அரசு நிர்ணயித்துள்ள விலையில் உரங்கள் விற்பனை செய்யப்படுகிறதா?, விற்பனை செய்யப்படும் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு முறையாக ரசீது வழங்கப்படுகிறதா?, விற்பனை முனைய கருவி, உரம் இருப்பு, உரம் இருப்பு பதிவேடு ஆகியவை சரியாக உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய வேளாண்மை துறை அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் சாந்தி உத்தரவிட்டார்.
அதன்பேரில் தர்மபுரி மாவட்ட வேளாண்மை தரக்கட்டுப்பாடு உதவி இயக்குனர் தாம்சன், பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் முனிகிருஷ்ணன் ஆகியோர் தர்மபுரி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் உள்ள தனியார் உரக்கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உரக்க்கடைகளில் உரம் இருப்பு மற்றும் விலை விவர பலகை விவசாயிகளின் பார்வைக்கு தெரியும்படி வைத்து பராமரிக்கப்படுகிறதா? விவசாயியின் ஆதார் எண் கொண்டு விற்பனை முனைய கருவி மூலம் உரங்கள் விற்பனை செய்யப்படுகிறதா? அனுமதி பெறாத உரங்கள் விற்பனை செய்யப்படுகிறதா? அனுமதி பெற்ற இடத்தில் மட்டுமே உரங்கள் இருப்பு வைத்து விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
விற்பனைக்கு தடை
இதேபோன்று உரக்கடைகளில் காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகள் ஏதேனும் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது உரக்கட்டுப்பாட்டு சட்டத்தை மீறி செயல்பட்ட 3 உரக்கடைகளில் விற்பனைக்கு தடை விதித்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் யூரியா 4 ஆயிரத்து 853 டன்னும், டி.ஏ.பி. 2 ஆயிரத்து 420 டன்னும், பொட்டாஷ் 439 டன்னும், காம்ப்ளக்ஸ் 6 ஆயிரத்து 155 டன்னும், சூப்பர் பாஸ்பேட் 380 டன்னும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி விற்பனை முனைய கருவி மூலம் அரசு மானிய உரங்களை பெற்று பயன் அடைய வேண்டும். உரக்கட்டுப்பாட்டு சட்டத்தை மீறி செயல்படுமம் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தர்மபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் விஜயா எச்சரிக்கை விடுத்துள்ளார்.