பட்டா தொடர்பான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை


பட்டா தொடர்பான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை
x

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பட்டா தொடர்பான மனுக்கள் மீது வருவாய்த்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் வளர்மதி கூறினார்.

ராணிப்பேட்டை

ஆய்வு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட வருவாய்த்துறையின் பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, வருவாய்த்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து வருவாய்த்துறை சார்ந்த பணிகளை ஆய்வு செய்தார். மேலும் நிலுவையில் உள்ள பணிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

அனைத்து தாலுகாவிலும் வருவாய் கோட்டாட்சியர்கள் மற்றும் தாசில்தார்கள் ரேஷன் கடைகளில் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும். மழைக்காலம் தொடங்க உள்ளதால் ரேஷன் கடைகளில் கட்டிடத்தின் தன்மை நன்றாக உள்ளதா என்பதையும், பொருட்கள் போதுமான இருப்பு உள்ளதா என்பதை விற்பனையாளரிடம் கேட்டறிந்து ஆய்வு செய்ய வேண்டும்.

காலை உணவு திட்டம் அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் முறையாக செயல்பட்டு வருகிறதா என்பதையும் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக உணவின் தரம் சரியான அளவில் உள்ளதா என்பதை உண்டு ஆய்வு செய்ய வேண்டும்.

உடனடி நடவடிக்கை

ஒவ்வொரு வட்டங்கள் வாரியாக வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் பல்வேறு சான்றிதழ்கள் நிலுவைகளை உள்ளவற்றை உடனடியாக முடிக்க வேண்டும். கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறப்பு பட்டா வழங்கும் முகாம் விரைவில் நடைபெற உள்ளது. ஆகவே அனைத்து வட்டங்களிலும் பொதுமக்கள் அளித்து நிலுவையில் உள்ள பட்டா மாற்றம், புதிய பட்டா தொடர்பான மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சிறப்பு பட்டா வழங்கும் முகாமில் மனுதாரர்களுக்கு வழங்கும் வகையில் தயார்நிலையில் இருக்க வேண்டும்.

திறந்தவெளி பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட நிலங்கள் தொடர்பாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் 618 கோப்புகள் நிலுவையில் உள்ளன. இவ்விடங்களில் அரசு கட்டிடங்கள், சமுதாயக் கூடங்கள், பூங்காக்கள் அமைக்க ஒதுக்கீடு செய்யலாம். ஆகவே கோப்புகளை உடனடியாக ஆய்வு செய்து நிலங்கள் குறித்து தகவல்களை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், உதவி ஆணையாளர் (கலால்) வரதராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story