இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் இருந்து தமிழக மீனவர்களை காத்திடுக - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்


இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் இருந்து தமிழக மீனவர்களை காத்திடுக - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 23 Aug 2023 8:53 AM GMT (Updated: 23 Aug 2023 10:41 AM GMT)

இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினராலும், இலங்கை கடற்கொள்ளையராலும் தாக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது. இதனால் தமிழக மீனவர்கள் தங்கள் படகுகள், மீன்பிடி உபகரணங்களை இழப்பதுடன் சில நேரங்களில் அவர்களால் கடுமையாக தாக்கப்பட்டு தொடர்ந்து மீன்பிடி தொழிலுக்குச் செல்ல முடியாத நிலையும் ஏற்படுகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

நாகப்பட்டினம் மாவட்டம், ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம் செருதூர், புஷ்பவனம் உள்ளிட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த 4 விசைப் படகுகள், இரண்டு பைபர் படகுகள் என்று மொத்தம் 6 படகுகளில் ஆறுகாட்டுத்துறையில் இருந்து சுமார் 22 நாட்டிக்கல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை திடீரென்று 13 இலங்கை கடற்கொள்ளையர்கள் சுற்றி வளைத்து, மீனவர்களை கத்தி, கட்டை, கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கி உள்ளனர். மேலும், மீனவர்களின் படகுகளில் இருந்த மீன்பிடி வலைகள், திசை காட்டும் கருவிகள், பேட்டரிகள், வாக்கி டாக்கி மற்றும் மீன்பிடி உபகரணங்களை பறித்துக்கொண்டு சென்றுவிட்டனர்.

மேலும், மீனவர்கள் போட்டிருந்த அருணாக் கொடியைக்கூட கத்தியை வைத்து அறுத்து கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாகவும், வந்த கொள்ளையர்கள் மீனவர்களின் தலையிலேயே கத்தி மற்றும் இதர ஆயுதங்களால் தாக்கி அச்சுறுத்தி உள்ளனர். மேலும், கடற்கொள்ளையர்கள் அனைவரும் இலங்கைத் தமிழில் பேசியதுடன், மீனவர்களிடம் "உங்களை அப்படித்தான் தாக்குவோம்; உங்களுக்கு எந்த நாதியும் இல்லை; உங்களைக் காப்பாற்ற யாரும் வரமாட்டார்கள்" என்று பேசி தாக்கினார்கள் என்று மீனவர்கள் கண்ணீர் மல்க கூறினர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் மீண்டும் வெள்ளப்பள்ளத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் நேற்று (22.8.2023) இரவு, இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், அதில் ராமராஜூ த/பெ. கிருஷ்ணசாமி என்ற மீனவர் காயமடைந்த நிலையில் இன்று (23.8.2023) காலை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் தாக்கப்பட்ட நிகழ்வு பற்றி அறிந்தவுடன், கழக அமைப்புச் செயலாளரும், நாகப்பட்டினம் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. ஒ.எஸ். மணியன் அவர்களை நான் தொடர்புகொண்டு, உடனடியாக கழக நிர்வாகிகளை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களுக்கு நிதயுதவி அளிக்க கேட்டுக்கொண்டேன். அதன்படி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நாகப்பட்டினம் மாவட்டத்தின் சார்பில் தாக்குதலுக்குள்ளான மீனவர்களுக்கு நிதியுதவி வழங்கியதோடு, மருத்துவ உதவிகளும் அளிக்கப்பட்டன.

கடற்கொள்ளையர்களால் நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து நாகை மீனவர்கள் இன்று (23.8.2023) வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். கடலில் உயிரை பணயம் வைத்து மீன்பிடிக்கும் மீனவர்களைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத பொம்மை முதலமைச்சர், எப்போதும் போல மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதி, தன் இமாலய கடமையை(?) முடித்திருக்கிறார். மீன்வளத் துறைக்கென்று மந்திரியாக இருப்பவரை நேரில் அனுப்பி வைத்து, பாதிக்கப்பட்ட மீனவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறச் சொல்லாமலும், மீனவர்களுக்கு தேவையான மீன்பிடி சாதனங்கள் மற்றும் நிவாரணங்களை வழங்காமலும் இருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.

எனது தலைமையிலான அம்மாவின் அரசு, மக்கள் நலத் திட்டங்களுக்காக மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய போதெல்லாம், கேலியும் கிண்டலும் பேசிய அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின், அடிமைகள் என்று வியாக்கியானம் செய்துவிட்டு, தற்போது மத்திய அரசின் கொத்தடிமையாக, காகிதப் புலியாக மாறி, கடிதம் அனுப்புகிறாரோ என்று தமிழக மக்கள் கேலி செய்கிறார்கள்.

மாண்புமிகு அம்மா அவர்களால் துவக்கப்பட்ட தமிழக காவல் துறையின் ஒரு சிறப்புப் பிரிவாக கடலோர பாதுகாப்புக் குழுமம், அம்மாவின் எங்களது அரசில் பல காலம் சிறப்பாக செயல்பட்டது. இந்த விடியா அரசின் நிர்வாகச் சீர்கேட்டால் அந்தக் கடலோர பாதுகாப்புக் குழுமம் எங்கு இருக்கிறது என்றே தெரியவில்லை.

கடல் வாழ் மீனவர்களைப் பாதுகாக்க, கடலோர பாதுகாப்புக் குழுமத்தை மீண்டும் செயலாக்கத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்றும்; பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு, அவர்கள் இழந்த மீன்பிடி உபகரணங்களை வழங்குவதுடன், தகுந்த நிவாரண உதவிகளையும் உடனடியாக வழங்கிட வேண்டும் என்றும், நிர்வாகத் திறனற்ற முதல்-அமைச்சரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story