நாமக்கல்லில்தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


நாமக்கல்லில்தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Sep 2023 7:00 PM GMT (Updated: 11 Sep 2023 7:01 PM GMT)
நாமக்கல்

பி.எட், பயிற்சி மாணவர்களை பள்ளிகளுக்கு ஆய்வுக்கு அனுமதிப்பதை கைவிட வேண்டும். ஆசிரியர்களுக்கு தேவையற்ற பணிசுமைகளை ஏற்படுத்துவதோடு, மாணவர்களின் கல்வி தரத்தினை முற்றிலும் பாதிக்கும் எண்ணும், எழுத்து திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் பூங்கா சாலையில், தமிழ்நாடு தொடக்க கல்வித்துறை ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் முத்துசாமி தலைமை தாங்கினார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொருளாளர் முருக செல்வராசன் முன்னிலை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, சி.ஆர்.சி. பயிற்சி மற்றும் பிற பயிற்சிகளுக்கு கருத்தாளர்களாக ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுவதால், கற்றல், கற்பித்தல் பணியில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே பயிற்சி கருத்தாளர்களாக ஆசிரியர்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பள்ளி மேலாண்மைக்கு ஒவ்வொரு மாதமும் கூட்டங்களை கூட்டுவதால், ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு, 3 மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை கூட்ட வேண்டும். விடுமுறை நாட்களில் பயிற்சி அளிப்பதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் பழனியப்பன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் அண்ணாதுரை, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் சங்கர், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் மாதேஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story