ஜேடர்பாளையத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
ஜேடர்பாளையத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் காமராஜர் நகர், சரளைமேடு பகுதியில் மாவட்ட நெடுஞ்சாலையின் இருபுறமும் சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. இதனை அகற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை 7 நாட்களுக்குள் காலி செய்ய சம்பந்தப்பட்டவர்களுக்கு நெடுஞ்சாலைத்துறை நோட்டீசு அனுப்பியது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஜேடர்பாளையம் நான்கு ரோட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தமிழக அரசு வீடுகளை அகற்றும் உத்தரவுக்கு எதிராக கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வேண்டும். நெடுஞ்சாலை விரிவாக்கம் நடக்கும் வரை பொதுமக்கள் அந்த பகுதியில் வசிக்க அவகாசம் கொடுக்க வேண்டும். வீடுகளை அகற்றும் முன்பு இலவச வீட்டுமனை மற்றும் வீடு கட்ட தேவையான பொருளாதார உதவிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் கலந்து கொண்டனர். பொதுமக்களின் ஆர்ப்பாட்டத்தையொட்டி அங்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரணவீரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.