கல்வி மாவட்டங்களை ரத்து செய்ததை கண்டித்து அ.தி.மு.க. போராட்டம்
உசிலம்பட்டி, திருமங்கலம் கல்வி மாவட்டங்களை ரத்து செய்ததை கண்டித்து, மதுரை கலெக்டர் அலுவலகத்தில் அ.தி.மு.க.வினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.
உசிலம்பட்டி, திருமங்கலம் கல்வி மாவட்டங்களை ரத்து செய்ததை கண்டித்து, மதுரை கலெக்டர் அலுவலகத்தில் அ.தி.மு.க.வினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.
80 மாதிரி பள்ளிகள்
உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய கல்வி மாவட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது மீண்டும் செயல்பட வலியுறுத்தி சட்டமன்ற எதிர்க்கட்சித்துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் கலெக்டர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் கலெக்டர் அனிஷ் சேகரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அதனைத்தொடர்ந்து ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
சாமானிய மக்களுக்காக கல்வியில் வளர்ச்சி காணும் வகையில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2018-ம் ஆண்டு 52 புதிய கல்வி மாவட்டங்களை உருவாக்கினார். இதில் திருமங்கலமும் ஒன்றாகும். இந்த புதிய கல்வி மாவட்டங்கள் உருவானதன் மூலம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினியுடன் 14 சீருடைகள், மாணவர்கள்-ஆசிரியர்களின் குறைகளை எளிதில் பெற்று தீர்க்கும் வசதி இருந்தது.
நிர்வாகமும் எளிதாக இருந்தது. மாணவர்களின் தேர்ச்சி சதவீதமும் அதிகரித்தது. தமிழகம் முழுவதும் 80 பள்ளிகள் மாதிரி பள்ளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டன. இதில் உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய கல்வி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டன
தாலிக்கு தங்கம்
இந்த நிலையில் கல்வி மாவட்டங்களை ரத்து செய்வது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதில் மதுரை மாவட்டத்தில் 10 தொகுதியில் நான்கு கல்வி மாவட்டங்கள் உள்ளன. ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அ.தி.மு.க சட்டமன்ற தொகுதி உறுப்பினர்கள் உள்ள திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய கல்வி மாவட்டங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இது பழிவாங்கும் செயலாகும். வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே குடிமராமத்து திட்டம், தாலிக்கு தங்கம் திட்டம், மடிக்கணினி திட்டம், பெண்களுக்கு இருசக்கர வாகன திட்டம், அம்மா பரிசு பெட்டகம் ஆகியவை நிறுத்தப்பட்டு உள்ளன. யாரிடமும் கருத்து கேட்காமல் சர்வாதிகார போக்குடன்அரசு செய்துள்ளது. எனவே இதை மீண்டும் செயல்படுத்த வேண்டும். மீண்டும் உசிலம்பட்டி, திருமங்கலம் கல்வி மாவட்டங்கள் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது முன்னாள் எம்.எல்.ஏ. சரவணன், அ.தி.மு.க. நிர்வாகிகள் இளங்கோவன், சுதாகரன், வெற்றிவேல் உள்பட பலர் உடன் இருந்தனர்.