தர்மபுரியில்விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த விவசாய தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் மாதையன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பிரதாபன், நிர்வாகிகள் ராஜகோபால், முருகேசன், பச்ச கவுண்டர் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஏழை, எளிய விவசாய தொழிலாளர்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் ஒகேனக்கல் குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
60 வயதை கடந்த ஆண், பெண் விவசாய தொழிலாளர்களுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி மாத ஓய்வூதியமாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் சிறுதானிய உற்பத்தி விவசாயிகளுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும். 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் விவசாய தொழிலாளர்களின் குடும்பங்களை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு மாதாந்திர கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும். சிப்காட் தொழிற்பேட்டையில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய தொழிலாளர்களின் அடிப்படை வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.