தர்மபுரியில்கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் தர்மபுரி மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் காமராஜ், நிர்வாகிகள் முனுசாமி, ரவி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். மணல் கடத்தலை தடுத்த கிராம நிர்வாக அலுவலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். படுகொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.