தர்மபுரி மாவட்டத்தில்அரசு ஊழியர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


தர்மபுரி மாவட்டத்தில்அரசு ஊழியர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 April 2023 12:30 AM IST (Updated: 27 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

தர்மபுரி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட பொருளாளர் குமரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சுருளிநாதன், மாவட்ட செயலாளர் சேகர், மாவட்ட நிர்வாகிகள் புகழேந்தி, காவேரி, தமிழ்நாடு நில அளவை ஒன்றிப்பின் மாநில செயலாளர் கல்பனா உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

அரூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் பழனியம்மாள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர்கள் சங்கர், மகேஸ்வரி, தமிழ்நாடு பொதுநூலகத்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் பிரபாகரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

பழைய ஓய்வூதிய திட்டம்

தர்மபுரி நகராட்சி அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், காரிமங்கலம், பாலக்கோடு, கடத்தூர் ஆகிய பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட அகவிலைப்படி, காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்டர் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் அடிப்படையில் பணிபுரியும் ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள், கணினி இயக்குபவர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், வனப்பாதுகாவலர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வேண்டும்.

அரசு அலுவலகங்களில் உள்ள சுமார் 6 லட்சம் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story