தர்மபுரியில்ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக உள்ள பா.ஜ.க. எம்.பி. பிரிஜ் பூஷன் சரண்சிங் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கடந்த ஒரு வாரமாக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜனநாயக மாதர் சங்க மாவட்ட தலைவர் ஜெயா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மல்லிகா, ஒன்றிய செயலாளர் மீனாட்சி, நகர தலைவர் சுபா, நிர்வாகிகள் பூபதி, தனலட்சுமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினா்.
பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் மீது எழுந்துள்ள புகார் குறித்து பாரபட்சமின்றி வெளிப்படை தன்மையுடன் விசாரணை நடத்த வேண்டும்.
விசாரணை அடிப்படையில் அவரை கைது செய்ய வேண்டும். மல்யுத்த விளையாட்டு வீராங்கனைகளின் கண்ணியத்தை பாதுகாக்க வேண்டும். இந்த புகார் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.