சிறுமி பாலியல் பலாத்காரம்:சிறை வார்டனை கைது செய்யக்கோரி அரூரில் ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சி போலீசார் பேச்சுவார்த்தை


சிறுமி பாலியல் பலாத்காரம்:சிறை வார்டனை கைது செய்யக்கோரி அரூரில் ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சி போலீசார் பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 9 Jun 2023 12:30 AM IST (Updated: 9 Jun 2023 10:11 AM IST)
t-max-icont-min-icon

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த சிறை வார்டனை கைது செய்யக்கோரி அரூரில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தர்மபுரி

அரூர்:

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். சிறுமி தனது பாட்டியின் பராமரிப்பில் படித்து வந்தார். இந்த நிலையில் சிறுமிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. டாக்டர் பரிசோதித்தபோது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த லெனின்குமார் என்கிற பார்த்திபன் (வயது 30) கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தது தெரிந்தது.

லெனின்குமார் குன்னூரில் சிறை வார்டனாக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் அரூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி லெனின் குமார் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் சிறுமி பலாத்காரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள போக்சோ வழக்கில் லெனின்குமாரை கைது செய்ய வேண்டும். அவரை பணி நீக்கம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக மாதர் சங்கத்தினர் நேற்று அரூர் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த சென்றனர். இது பற்றி தகவல் அறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ், ஜனநாயக மாதர் சங்க மாவட்ட நிர்வாகிகள் மல்லிகா, ஜெயா உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது 15 நாட்களில் லெனின் குமாரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதனால் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.


Next Story