தர்மபுரி நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்


தர்மபுரி நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 22 Jun 2023 12:30 AM IST (Updated: 22 Jun 2023 12:40 PM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சி.ஐ.டி.யு. மாவட்ட பொது செயலாளர் நாகராசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜீவா, உள்ளாட்சி தொழிலாளர் சங்க நிர்வாகி செல்வம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

தூய்மை பணிக்கு விடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து நகராட்சி நிர்வாகமே நேரடியாக பணியை வழங்க வேண்டும். 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 137 காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அனைத்து தூய்மை தொழிலாளர்களுக்கும் ஒரு நாளுக்கு ரூ.596 ஊதியம் வழங்க வேண்டும்.

பி.எப். உள்ளிட்ட திட்டங்களுக்கு தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்படும் தொகையை அந்தந்த நிறுவனங்களுக்கு உடனடியாக செலுத்த வேண்டும். 8 மணி நேர வேலையை உத்தரவாதப்படுத்த வேண்டும். 3 பேர் செய்யக்கூடிய வேலையை ஒரே தொழிலாளியை செய்ய வைத்து வேலை பளுவை ஏற்படுத்துவதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது மற்றும் அதிகாரிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து உள்ளிருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது.


Next Story