கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு: கோரிக்கை அட்டையுடன் கோவிலுக்கு தீர்த்த குடம் கொண்டு சென்ற பெண்கள்- போலீசார் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம்


கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு: கோரிக்கை அட்டையுடன் கோவிலுக்கு தீர்த்த குடம் கொண்டு சென்ற பெண்கள்- போலீசார் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம்
x

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கோரிக்கை அட்டையுடன் பெண்கள் கோவிலுக்கு தீர்த்த குடம் கொண்டு சென்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஈரோடு

நம்பியூர்

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கோரிக்கை அட்டையுடன் பெண்கள் கோவிலுக்கு தீர்த்த குடம் கொண்டு சென்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

காத்திருப்பு போராட்டம்

ஈரோடு மாவட்டத்தில் முக்கிய பாசன வாய்க்காலாக கீழ்பவானி வாய்க்கால் உள்ளது. இங்கு கான்கிரீட் தளம் அமைக்க கூடாது என்று ஒரு தரப்பு விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 6-ந் தேதி நம்பியூர் அருகே உள்ள எலத்தூர் செட்டிபாளையத்தில் கீழ்பவானி வாய்க்காலின் கரைகளில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அந்த பகுதி விவசாயிகள் அங்கு திரண்டு சென்று கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். மேலும் அங்கு எந்த பணிகளும் நடைபெற கூடாது என்று அங்கேயே பந்தல் அமைத்து காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

பேச்சுவார்த்தை தோல்வி

போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு எலத்தூர், செட்டிபாளையம் உள்ளிட்ட பகுதியில் உள்ள 8 கிராமங்களில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. இதையடுத்து அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதைத்தொடர்ந்து விவசாயிகள் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூடவேண்டும். கீழ்பவானி வாய்க்காலில் எந்த இடத்திலும் கான்கிரீட் தளம் அமைக்க கூடாது என்று காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். நேற்று 7-வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாய பணி பாதிப்பு

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ' முழுவதுமாக மண்ணால் அமைக்கப்பட்டுள்ள காலிங்கராயன் வாய்க்காலில் பக்கவாட்டு பகுதியில் கான்கிரீட் கான்கிரீட் தளம் அமைத்தால் கசிவுநீர் குட்டைகள் மூலம் நடைபெறும் விவசாய பணி பாதிக்கப்படும். எங்கள் பகுதியில் சுமார் 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல் கசிவுநீர் பாசன விவசாயம் நடக்கிறது.

ஏற்கனவே நம்பியூர் அருகே உள்ள ஆண்டிபாளையம், கடத்தூர் வழியாக செல்லும் கீழ்பவானி வாய்க்காலின் ஒரு பகுதியில் சுமார் 3 கி.மீ அளவுக்கு கான்கிரீட் சுவர் அமைக்கப்பட்டது. தற்போது இதே அளவு வாய்க்காலில் மற்றொரு பகுதியிலும் கான்கிரீட் சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது அமைக்கப்பட்டால் முற்றிலுமாக கசிவுநீர் குட்டைக்கு செல்லும் தண்ணீர் தடைபடும். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் கான்கிரீட் தளம் அமைப்பதிலேயே குறியாக உள்ளனர். எனவே எங்கள் கோரிக்கை குறித்து தெய்வத்திடம் தெரிவிக்க உள்ளோம்' என்றனர்.

மாசாணியம்மன் கோவிலுக்கு...

இதைத்தொடர்ந்து செட்டிபாளையத்தில் உள்ள விநாயகர் கோவிலில், சாமிக்கு அபிஷேகம் செய்ய தண்ணீர் குடங்களுடன் போராட்ட குழுவில் பங்கேற்றிருந்த பெண்கள் சென்றனர். அவ்வாறு சென்ற பெண்கள் கைகளில் தங்களுடைய கோரிக்கை வாசகங்கள் எழுதிய அட்டைகளை வைத்திருந்தனர்.

இதுகுறித்து அறிந்ததும் போலீசார் அங்கு சென்று பெண்களை தடுத்து நிறுத்தினர். அனுமதியில்லாமல் கோரிக்கை அட்டை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்கள். இதனால் பெண்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து தீர்த்த குடத்தை எடுத்துச் செல்லாமல் பெண்கள் பந்தலுக்கு திரும்பினர். பின்னர் பந்தலில் செங்கல் வைத்து அதை விநாயகராக பாவித்து அபிஷேகம் செய்தனர்.

அதன்பின்னர் பெண்கள் பொள்ளாச்சி மாசாணியம்மன் கோவிலுக்கு சென்று அம்மனுக்கு வர மிளகாய் அரைத்து அபிஷேகம் செய்து தங்களுடைய கோரிக்கை குறித்து வேண்டுதல் வைக்கப்போகிறோம் என்று கூறினார்கள். அதன்படி பொள்ளாச்சி மாசாணியம்மன் கோவிலுக்கு வேனில் புறப்பட்டு சென்றனர்.


Next Story