பொத்தேரியில் ஆக்கிரமிப்பு கடைகளை இடிக்க எதிர்ப்பு


பொத்தேரியில் ஆக்கிரமிப்பு கடைகளை இடிக்க எதிர்ப்பு
x

பொத்தேரியில் நீர்நிலை பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது.

செங்கல்பட்டு

ஆக்கிரமிப்பு

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி கிராமத்தில் உள்ள தாங்கள் ஏரிக்கு சொந்தமான நீர் நிலைகளை ஆக்கிரமித்து கடைகள் மற்றும் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த ஆக்கிரப்புகளை ஐகோர்ட்டு உத்தரவின் படி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்தின் மூலம் சில ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் மேலும் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடை, வீடுகளை இடிக்காமல் அப்படியே விட்டுவிட்டு அதிகாரிகள் சென்று விட்டனர். இந்த நிலையில் நேற்று மீண்டும் போலீஸ் பாதுகாப்போடு வந்த அதிகாரிகள் இடிக்கப்படாமல் மீதி இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை பொக்லைன் எந்திரத்தின் மூலம் இடிக்க தொடங்கினார்கள்.

வாக்குவாதம்

அப்போது கடைகளை இடிப்பதற்கு 3 பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கு இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது ஆக்கிரமிப்பாளர்கள் பல்வேறு இடங்களில் நீர் நிலையில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் நாங்கள் கட்டி உள்ள கடைகளை அகற்றுவதற்கு மட்டும் மீண்டும் மீண்டும் வருகின்றனர். எனவே மற்ற இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு இந்த ஆக்கிரமிப்பு கடையை இடியுங்கள் என்று ஆவேசமாக தெரிவித்தனர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்த பெண் ஒருவர் திடீரென ஒரு கல்லை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த பொக்லைன் எந்திரத்தின் கண்ணாடி மீது வீசினார். இதில் பொக்லைன் எந்திரத்தின் கண்ணாடி நொறுங்கியது. இதனையடுத்து நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆக்கிரமிப்பு அகற்றுவதை நிறுத்திவிட்டு பாதியிலே சென்றுவிட்டனர்.


Next Story