ஈரோட்டில் வட மாநிலத்தவர்களை பணியில் அமர்த்த எதிர்ப்பு: தனியார் பார்சல் நிறுவனத்தை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் போராட்டம்


ஈரோட்டில் வட மாநிலத்தவர்களை பணியில் அமர்த்த எதிர்ப்பு:  தனியார் பார்சல் நிறுவனத்தை  முற்றுகையிட்டு தொழிலாளர்கள் போராட்டம்
x

வட மாநிலத்தவர்களை பணியில் அமர்த்த எதிர்ப்பு தெரிவித்து ஈரோட்டில் தனியார் பார்சல் நிறுவனத்தை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஈரோடு சரக்கு போக்குவரத்து சங்க நிர்வாகி தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு

வட மாநிலத்தவர்களை பணியில் அமர்த்த எதிர்ப்பு தெரிவித்து ஈரோட்டில் தனியார் பார்சல் நிறுவனத்தை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஈரோடு சரக்கு போக்குவரத்து சங்க நிர்வாகி தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

போனஸ் -முன்பணம்

ஈரோடு பவானி ரோட்டில் பார்சல்கள் அனுப்பும் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் உள்ளது. இந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஈரோட்டை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகையின்போது போனஸ், முன்பணம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.

இதுபற்றிய பேச்சுவார்த்தையில், 'தலைமை அலுவலகம் உத்தரவிட்ட பின்னர் தான் போனஸ் வழங்கப்படும்' என ஈரோடு மேலாளர் தெரிவித்துள்ளார். கடந்த 14-ந்தேதி 4 கன்டெய்னர்களில் இந்த நிறுவனத்திற்கு சரக்குகள் வந்துள்ளன. இந்த சரக்குகளை 8 தொழிலாளர்கள் இறக்கினர்.

பணி இடை நீக்கம்

அப்போது, 'தங்களுக்கு போனஸ், முன்பணம் தரவில்லை' என சுமை தூக்கும் தொழிலாளர்கள் அந்த நிறுவனத்திடம் கேட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் அந்த நிறுவனத்தின் அதிகாரிகள், 'நீங்கள் பணி செய்ய வேண்டாம்.

வெளியே செல்லுங்கள்' எனக்கூறி தொழிலாளர்களை வெளியேற்றி விட்டனர். அதைத்தொடர்ந்து அவர்கள், வடமாநில தொழிலாளர்களை அழைத்து வந்து, சரக்கை இறக்கி உள்ளனர். இதற்கு ஈரோட்டை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து இதுபற்றி கடந்த 15-ந்தேதி, கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, அந்த நிறுவனத்தின் மேலாளர், 'தங்களிடம் பணி செய்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் 8 பேர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், வடமாநில தொழிலாளர்கள் பணி செய்வார்கள். 10 நாட்களுக்கு பின்னர் பழைய தொழிலாளர்களை அனுமதிப்போம்' என்று தெரிவித்துள்ளார். இதனை தொழிலாளர்கள் ஏற்கவில்லை.

சாலை மறியல்

இந்த நிலையில் நேற்று அந்த நிறுவனத்தினர் வடமாநில தொழிலாளர்களை வைத்து சரக்குகளை இறக்க முயன்றுள்ளனர். இதனை அறிந்த 500-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் அந்த நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தொழிலாளர்கள் ஈரோடு -பவானி ரோட்டில் அமர்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த கருங்கல்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜபிரபு மற்றும் போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி, அருகில் உள்ள மண்டபத்திற்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து போக்குவரத்து சீரானது.

தாக்குதல்

இதற்கிடையில் அந்த நிறுவன வளாகத்துக்குள் இருந்து, ஈரோடு சரக்கு போக்குவரத்து சங்க செயலாளர் பிங்ளன் என்பவர், தனது மோட்டார் சைக்கிளில் வெளியே வந்தார். அப்போது அவர் சுமை தூக்கும் தொழிலாளர் ஒருவர் மீது இடித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள் அவருடைய சட்டையை கிழித்து கடுமையாக தாக்கினர். போலீசார் தடுத்தபோதும், அவரை விரட்டி, விரட்டி தொழிலாளர்கள் தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டது. இந்த தாக்குதலால் அவருக்கு தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியது. இதைத்தொடர்ந்து அவர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் ஏற்றப்பட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார்.

தொழிலாளர்கள் பாதிப்பு

இதுகுறித்து சி.ஐ.டி.யு. தொழிற்சங்க தலைவர் தங்கவேல் கூறியதாவது:-

இங்கு பணி செய்யும் தொழிலாளர்களுக்கு போனஸ், முன்பணம் வழங்க வேண்டும். வடமாநில தொழிலாளர்களை பணி செய்ய அனுமதிக்க முடியாது. ஏற்கனவே பணி செய்தவர்களுக்கே பணி வழங்க வேண்டும். சுமை தூக்கும் தொழிலாளர்களைப் பணி இடை நீக்கம் செய்தால், அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கும்.

ஈரோடு மாநகர் பகுதியில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்கின்றனர். அவர்களுக்கு பதில் வட மாநில தொழிலாளர்களை அனுமதித்தால், இவர்களது வேலைவாய்ப்பு பறிபோகும். எனவே இதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்' என்றார்.

பரபரப்பு

அதைத்தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, டி.பி.டி.எஸ். தொழிற்சங்க தலைவர் மனோகரன், சி.ஐ.டி.யு. தொழிற்சங்க தலைவர் தங்கவேல் உள்ளிட்ட நிர்வாகிகள், கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர்.

அங்கு சரக்கு போக்குவரத்து சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சுமூகமான தீர்வு காண முடிவானது. இதைத்தொடர்ந்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பத்தால் ஈரோட்டில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story