விழுப்புரம், செஞ்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து போராட்டம்


விழுப்புரம்,  செஞ்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து போராட்டம்
x
தினத்தந்தி 8 Sept 2023 12:15 AM IST (Updated: 8 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம், செஞ்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம்

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மம் பற்றி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே, அயோத்தியைச் சேர்ந்த சாமியாரான பரமஹன்ஸ ஆச்சார்யா என்பவர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால், அவருடைய தலையைக் கொண்டுவருவோருக்கு 10 கோடி ரூபாய் அளிக்கப்படும் என அறிவித்தார்.

இதையடுத்து, சாமியாரான பரமஹன்ஸ ஆச்சார்யாவுக்கு எதிராக தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதே நேரத்தில் தற்போது இந்து அமைப்பினர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில், விழுப்புரம் மாவட்ட இந்து முன்னணி சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் தடையை மீறி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சதீஷ் அப்பு தலைமை தாங்கினார். கோட்ட தலைவர் சிவா, மாவட்ட பொதுச்செயலாளர்கள் சுரேஷ், துரைராஜ், காந்தி, மாவட்ட பொருளாளர் விஸ்வநாதன், மாவட்ட செயலாளர்கள் வெங்கடேஷ், தனபால், விழுப்புரம் நகர செயலாளர் பிரசாந்த், பொருளாளர் பரணி உள்பட பலர் கலந்துகொண்டு கோஷம் எழுப்பினர். உடனே விழுப்புரம் தாலுகா போலீசார் விரைந்து சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 22 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.கைதான இவர்கள் அனைவரும் சிறிது நேரம் கழித்து விடுவிக்கப்பட்டனர்.

செஞ்சி

சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசியதை கண்டித்து விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு இந்து முன்னணி மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். பா.ஜ.க. முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், இந்து முன்னணி முன்னாள் அமைப்பாளர் விஷ்ணு ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பா.ஜ.க. மாவட்ட பொது செயலாளர் பாண்டியன், மாவட்ட துணை தலைவர் பிரித்திவிராஜ், ஒன்றிய தலைவர் தங்கராமு, ஆர்.எஸ்.எஸ். நாராயணமூர்த்தி, பாஜக மகளிர் அணி விஜயலட்சுமி, இந்து முன்னணி நிர்வாகிகள் கார்த்தி, ஆனந்த், கார்த்திகேயன், சந்திரசேகர், பாபு, குப்புசாமி உள்பட பலா் கலந்து கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 35 பேரை செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கவினா தலைமையிலான போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.


Next Story