உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சியில்அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து போராட்டம் :இந்து அமைப்பினர் 37 பேர் கைது


உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சியில்அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து போராட்டம் :இந்து அமைப்பினர் 37 பேர் கைது
x
தினத்தந்தி 8 Sept 2023 12:15 AM IST (Updated: 8 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர் 37 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி


உளுந்தூர்பேட்டை,

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மம் பற்றி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே, அயோத்தியைச் சேர்ந்த சாமியாரான பரமஹன்ஸ ஆச்சார்யா என்பவர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால், அவருடைய தலையைக் கொண்டுவருவோருக்கு 10 கோடி ரூபாய் அளிக்கப்படும் என அறிவித்தார்.

இதையடுத்து, சாமியாரான பரமஹன்ஸ ஆச்சார்யாவுக்கு எதிராக தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதே நேரத்தில் தற்போது இந்து அமைப்பினர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள்.

17 பேர் கைது

அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இந்து மகா சபா மாநில பொதுச்செயலாளர் பெரி.செந்தில் தலைமையில் உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து இந்து மகா சபா மற்றும் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் அங்கு அவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, விரைந்து சென்று 17 பேரை கைது செய்தனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

இதில், மகா சபா மாநில செயலாளர் ஏ.பி. தங்கதுரை, கள்ளக்குறிச்சி மாவட்ட இந்து மகா சபா தலைவர் சபரி ராஜன், இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஏழுமலை, மாவட்ட செயலாளர் பிரசாந்த், நிர்வாகிகள் ஆனந்த் துரை காத்தவராயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி

இதேபோல் கள்ளக்குறிச்சியில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இந்து முன்னணி சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து, அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதாக கூறி நகர தலைவர் வெங்கடேசன் உள்பட 20 பேரை போலீசார் கைது செய்து, அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.


Related Tags :
Next Story