தனியார் பஸ்களை சிறைபிடித்து போராட்டம்


தனியார் பஸ்களை சிறைபிடித்து போராட்டம்
x
தினத்தந்தி 3 Dec 2022 12:15 AM IST (Updated: 3 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருவெண்ணெய்நல்லூரில் தனியார் பஸ்களை சிறைபிடித்து போராட்டம் நடந்தது.

விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர்:

விழுப்புரம், பண்ருட்டி, திருக்கோவிலூர் ஆகிய ஊர்களில் இருந்து வரும் பஸ்கள், திருவெண்ணெய்நல்லூர் பஸ் நிலையத்துக்குள் செல்வதில்லை. மாறாக அணைக்கட்டு சாலை வழியாக சென்று விடுகின்றன. அதாவது அணைக்கட்டு சாலையில் பயணிகளை இறக்கி விடுவதால் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

பஸ்களை சிறைபிடித்து போராட்டம்

இந்த நிலையில் நேற்று திருவெண்ணெய்நல்லூர் பஸ் நிலையத்துக்குள் செல்லாமல் அணைக்கரை சாலையிலேயே பயணிகளை இறக்கி விட்ட தனியார் பஸ்களை அரசியல் கட்சியினர் மற்றம் பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் முருகன், தே.மு.தி.க. நகர செயலாளர் அச்சு முருகன், அ.ம.மு.க. நகர செயலாளர் சோலையப்பன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் மணிகண்டன், திராவிடர் கழக நகர பொறுப்பாளர் பரந்தாமன், தே.மு.திக. ஒன்றிய பொருளாளர் செந்தில் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இது பற்றி தகவல் அறிந்ததும் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரபு, ராபர்ட், ராமலிங்கம் மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது போலீசார், அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்துக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த சாலையில் 30 நிமிடம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.


Next Story