மின்மாற்றியில் இருந்து விவசாய மின் இணைப்பு எடுக்க எதிர்ப்பு: பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டம்


மின்மாற்றியில் இருந்து விவசாய மின் இணைப்பு எடுக்க எதிர்ப்பு: பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டம்
x

மின்மாற்றியில் இருந்து விவசாய மின் இணைப்பு எடுக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் கம்மாபுரம் அருகே பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

கம்மாபுரம்,

கம்மாபுரம் அருகே கோ.ஆதனூர் 4-வது வார்டில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி குடியிருப்புகளுக்கு மின்சார வாரியம் மூலம் மின்வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் ஏற்பட்ட குறைந்த அளவு மின்சாரம் காரணமாக மின்சாதன பொருட்கள் பழுதானது. இதனால் பாதிக்கப்பட்ட 4-வது வார்டு மக்கள் வரி வசூல் செய்து மின்வாரியம் மூலம் புதிதாக மின்மாற்றி அமைத்து, சீரான மின்சாரம் பெற்று வந்தனர்.

இந்த நிலையில் 1-வது வார்டை சேர்ந்த தனிநபர் ஒருவர் அவரது விவசாய நிலத்தில் மின்மோட்டார் இணைப்பு பெற மின்வாரியத்திடம் அனுமதி பெற்றார். இதையடுத்து மின் ஊழியர்கள் மின்மாற்றியில் இருந்து விவசாய மோட்டாருக்கு மின் இணைப்பு கொடுப்பதற்கான பணியில் நேற்று ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த 4-வது வார்டு மக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மின் ஊழியர்கள் பணியை பாதியில் நிறுத்திவிட்டு, அங்கிருந்து சென்று விட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story