சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்துவிருத்தாசலத்தில், பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து விருத்தாசலத்தில், பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் தனியார் பள்ளியில் படித்து வந்த 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கடலூர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் விருத்தாசலம் பாலக்கரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் மணியழகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட பொது செயலாளர்கள் அக்னி கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ், பொருளாளர் மேகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்ட தலைவர் கோவிலானூர் மணிகண்டன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க. மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் பக்கிரிசாமியின் முதல் தகவல் அறிக்கை தவறாக கொடுக்கப்பட்டுள்ளதை மாற்றி கொடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பள்ளியின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும் பள்ளியில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் உள்ளனரா? என நீதி விசாரணை நடத்த வேண்டும். பள்ளி தாளாளருக்கு உடந்தையாக இருந்த ஆசிரியைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ஜ.க.வினர் கண்டன கோஷம் எழுப்பினர். இதில் மாவட்ட நிர்வாகிகள் செந்தில்குமார், சுபாஷ், பரந்தாமன், கணேஷ், அறிவழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.