ரூ.10 கோடி அறிவித்த சாமியார் உருவ பொம்மையை எரித்து போராட்டம்
குடியாத்தம் நகர, வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி அறிவித்த சாமியார் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடந்தது.
குடியாத்தம்
தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதிஸ்டாலின் சனாதனத்துக்கு எதிராக பேசியதாக அவரது தலைக்கு ரூ.10 கோடி தருவதாக உத்தரபிரதேச சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா என்பவர் அறிவித்தார்.
இதனை கண்டித்து குடியாத்தத்தில் நகர தி.மு.க. செயலாளரும், நகரமன்ற தலைவருமான எஸ்.சவுந்தரராஜன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் புதிய பஸ் நிலையம் அருகே சாமியார் உருவப்படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து உருவபொம்மையை எரித்தனர்.
இதில் மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜி.எஸ்.அரசு, எஸ்.பாண்டியன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நவீன்சங்கர், நகர இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.எஸ்.குகன், பொதுக்குழு உறுப்பினர் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் ஊர்வலமாக சென்று டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதேேபால் குடியாத்தம் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், ஒன்றியக்குழு தலைவருமான என்.இ.சத்யானந்தம் தலைமையில் குடியாத்தம் காட்பாடி ரோடு காந்திநகர் பகுதியில் சாமியார் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்து தூக்கிலிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து திமுகவினர் சாமியார் உருவ பொம்மையை எரித்தனர்.
நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் குடியாத்தம் குமரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் எஸ்.பி.சக்திதாசன், மாவட்ட இளைஞரணி துணைஅமைப்பாளர் கே.ராஜ்கமல், மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினர் ஆனந்திமுருகானந்தம், ஒன்றிய பொருளாளர் ஏ.ஜே.பத்ரிநாத், ஒன்றிய துணைசெயலாளர் சாவித்திரிமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.