கேரள அரசு பஸ்களை சிறை பிடித்து போராட்டம்


கேரள அரசு பஸ்களை சிறை பிடித்து போராட்டம்
x
தினத்தந்தி 26 April 2023 6:45 PM GMT (Updated: 26 April 2023 6:45 PM GMT)

கேரள அரசு பஸ்களை சிறை பிடித்து போராட்டம்

கோயம்புத்தூர்

கோவை

சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து கோவையில் கேரள அரசு பஸ்களை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

தடுப்பணை

கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. இதில் 36 வார்டு மக்களின் குடிநீர் தேவையை சிறுவாணி அணை பூர்த்தி செய்கிறது. மிகவும் சுவையான தண்ணீராக விளங்கும் சிறுவாணி நீர் கோவை மக்களின் தாகத்தை தணித்து வருகிறது. இந்த நிலையில் கேரள மாநிலம் அட்டப்பாடி கூலிகடவு-சித்தூர் சாலையில் நெல்லிப்பதி என்ற இடத்தில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது.

தொடர்ந்து சிறுவாணி ஆற்றின் குறுக்கே மேலும் 2 இடங்களில் தடுப்பணை கட்ட கேரள அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கு தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள், பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை கண்டித்து கேரள பஸ்களை சிறை பிடித்து போராட்டம் நடத்தப்படும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் அறிவித்து இருந்தார்.

போலீஸ் குவிப்பு

இதனை தொடர்ந்து கோவை காந்திபுரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் நிலையம் முன் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதனிடையே அறிவித்தப்படி பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் காந்திபுரம் பெரியார் படிப்பகம் முன் நேற்று காலை திரண்டனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் ஊர்வலமாக அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் நிலையத்திற்கு சென்று கேரள அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் ம.தி.மு.க.வை சேர்ந்த செல்வராஜ், எஸ்.டி.பி.ஐ., தமிழ்புலிகள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, புரட்சிகர இளைஞர் முன்னணி, திராவிடர் விடுதலை கழகம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் அவர்கள் கேரள அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கேரள அரசு பஸ்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story