மதுபான பாருக்கு பூட்டு போட்டு போராட்டம்


மதுபான பாருக்கு பூட்டு போட்டு போராட்டம்
x
தினத்தந்தி 23 April 2023 7:30 PM GMT (Updated: 23 April 2023 7:30 PM GMT)
சேலம்

சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததை கண்டித்து சேலத்தில் டாஸ்மாக் மதுபான பாருக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாருக்குள் இருந்தவர்களை போலீசார் வெளியேற்றினர்.

டாஸ்மாக் பாருக்கு பூட்டு

சேலம் பழைய பஸ் நிலையம் அருகில் அடுத்தடுத்து 2 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு மத்தியில் அரசு அனுமதியுடன் மதுபான பார் செயல்பட்டு வருகிறது. தினமும் மதியம் 12 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும்.

அப்போது, மதுபிரியர்கள் கடையில் மதுவை வாங்கி கொண்டு அருகில் உள்ள பாருக்கு சென்று மது அருந்துவார்கள். ஆனால் இந்த பாரில் சட்டவிரோதமாக விடிய, விடிய மது விற்பனை ஜோராக நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இதுபற்றி அறிந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று காலை 8 மணியளவில் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் பாருக்கு சென்றனர். அப்போது, பாருக்குள் மதுபிரியர்கள் சென்று கூடுதல் விலைக்கு மது வாங்கி அருந்தி வந்தனர். இதையடுத்து ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அந்த பாருக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் சட்டவிரோதமாக நடக்கும் மது விற்பனையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர். பாருக்கு பூட்டு போடப்பட்டதால் அங்கிருந்தவர்கள் வெளியே வரமுடியாமல் பரிதவிப்புக்கு ஆளாகினர்.

போலீசார் வெளியேற்றினர்

இதுகுறித்து தகவல் அறிந்த டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், 'இந்த பாரில் விடிய, விடிய மது விற்பனை நடைபெறுகிறது. இதுகுறித்து புகார் அளித்தும், ஆர்ப்பாட்டம் நடத்தியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே பாருக்கு சீல் வைக்க வேண்டும்' என்று கோஷங்களை எழுப்பினர்.

அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து காலை 9 மணியளவில் பாருக்கு போடப்பட்ட பூட்டை போலீசார் திறந்தனர். மேலும் பாருக்குள் மது அருந்தியவர்களை வெளியே அனுப்பினர்.

சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இந்த போராட்டம் நடந்ததால் பழைய பஸ் நிலைய பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story