வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தடை கோரி போராட்டம் - விக்கிரமராஜா


வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தடை கோரி போராட்டம் - விக்கிரமராஜா
x
தினத்தந்தி 10 Oct 2022 3:06 AM IST (Updated: 10 Oct 2022 11:21 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்திற்குள் வருவதற்கு தடை கோரி போராட்டம் அறிவிக்க உள்ளோம் என்று சேலத்தில் விக்கிரமராஜா கூறினார்.

சேலம்

பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் சேலம் மளிகை சில்லரை வியாபாரிகள் சங்க கூட்டம் ஆகியவை நேற்று சேலத்தில் நடைபெற்றது. இதற்கு சங்க மாவட்ட தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். செயலாளர்கள் இளையபெருமாள், வர்கீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

செஸ் வரியை ஒரு மாதத்தில் குறைப்பதாக மாநில அரசு கூறி உள்ளது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பது குறித்த நடைமுறையை இந்தியா முழுவதும் ஒரே மாதிரியாக நடைமுறைப்படுத்த வேண்டும். குட்கா பொருட்கள் விற்பனை செய்யாதவர்களை கைது செய்யும் நடவடிக்கையை போலீசார் கைவிட வேண்டும்.

மின் கட்டணம், சொத்து வரி உயர்வை குறைக்க வேண்டும். வணிகர்களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும். நாளை மறுநாள் (புதன்கிழமை) கன்னியாகுமரியில் பேரமைப்பின் ஆட்சி மன்ற குழு கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் ஜி.எஸ்.டி. வரியை குறைக்கவும், வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்திற்குள் வருவதை தடை செய்ய வலியுறுத்தியும் போராட்டம் அறிவிக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தடை செய்ய வேண்டும்

தொடர்ந்து கூட்டத்தில் நகராட்சி, மாநகராட்சிகளில் உள்ள அரசு கட்டிடங்களின் வாடகை முரண்பாடுகளை முறைப்படுத்த வேண்டும். விற்பனைக்கு தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை உற்பத்தி நிலையிலேயே தடை செய்து, சிறு வணிகர்களுக்கு இடையூறு இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும். ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் சங்க பொருளாளர்கள் சந்திரதாசன், செல்வகுமார் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story