வாய்க்காலில் இறங்கி ஒப்பாரி வைத்து நூதன போராட்டம்


வாய்க்காலில் இறங்கி ஒப்பாரி வைத்து நூதன போராட்டம்
x

வலங்கைமான் அருகே பாலத்தை சீரமைக்கக்கோரி வாய்க்காலில் இறங்கி ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தை ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நடத்தினர்.

திருவாரூர்

வலங்கைமான்,

வலங்கைமான் அருகே பாலத்தை சீரமைக்கக்கோரி வாய்க்காலில் இறங்கி ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தை ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நடத்தினர்.

திருகு பாலம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் சாரநத்தம் ஊராட்சி வேடம்பூர் கிராமத்தில் பாசன வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் இருந்து பாசனத்துக்கு வெட்டாற்று தண்ணீரை முறையாக திறந்து விட சுமார் 65 ஆண்டுகளுக்கு முன்பு திருகு பாலம் கட்டப்பட்டது.இந்த பாலத்தை கடந்து தான் அந்த பகுதி மக்கள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கூட்டுறவு அங்காடி, கிராம நிர்வாக அலுவலகம் போன்ற பகுதிகளுக்கும், கடைத்தெருவுக்கும் சென்று வர வேண்டும். மேலும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் இந்த திருகுபாலம் வழியாக சென்று வந்தன.

சேதம் அடைந்தது

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த பாலம் சேதம் அடைந்தது. இதனால் இந்த பகுதி மக்கள் வெளியூர்களுக்கு சென்று வர முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.எனவே மண் மற்றும் ஜல்லிக்கற்களை கொண்டு போக்குவரத்துக்காக தற்காலிக பாதை அமைக்கப்பட்டது. ஆனால் மழைக்காலங்களில் இது முற்றிலும் சேதம் அடைந்தது.

வாய்க்காலில் இறங்கி போராட்டம்

இந்த நிலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் சுமார் 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வாய்க்காலில் இறங்கி முழங்கால் அளவு தண்ணீரில் நின்று வேடம்பூர் சார வாய்க்கால் திருகு பாலத்தை சீரமைக்க வலியுறுத்தி ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது அவர்கள் இந்த வாய்க்கால் பாலத்தை தினமும் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்து சென்று வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக வாய்க்கால் பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

பேச்சுவார்த்தை

இந்த நூதன போராட்டம் குறித்து தகவல் அறிந்த வலங்கைமான் தாசில்தார் சந்தான கோபால கிருஷ்ணன், மண்டல துணை தாசில்தார் ஆனந்தன், வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதனைத்தாடர்ந்து போராட்டத்தை கைவிட்டு வாலிபர் சங்கத்தினர் கலைந்து சென்றனர்.


Next Story