மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் மனு கொடுக்கும் போராட்டம்
கள்ளக்குறிச்சியில் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் மனு கொடுக்கும் போராட்டம்
கள்ளக்குறிச்சி
மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலியாக உள்ள கள உதவியாளர் பணியிடங்களில் ஒப்பந்த ஊழியர்களை நியமித்து தினக்கூலி வழங்கி நிரந்தரப்படுத்த வேண்டும், தமிழக முதல்-அமைச்சர் அறிவித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு(சி.ஐ.டி.யு.) சார்பில் நேற்று மாநிலம் தழுவிய அளவில் தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு மாவட்ட கலெக்டர் மூலம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
அந்த வகையில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு(சி.ஐ.டி.யு.) சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற மனு கொடுக்கும் போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். இதில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். போராட்டத்தில் நிர்வாகிகள் கண்ணன், செந்தில், சீனிவாசன், வெங்கடேசன், சரவணன், ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமாரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தனர்.