விவசாயியை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி மறியல்
மோதல்
ஆலங்குடி அருகே கரம்பக்காடு முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி மாத திருவிழா நடத்துவது சம்பந்தமாக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்வது குறித்து பேசப்பட்டது. அப்போது கோவிலின் கும்பாபிஷேக வரவு, செலவு கணக்குகளை முறையாக காட்டிவிட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யுங்கள் என்று செரியலூர் பகுதியை சேர்ந்த ராஜகோபால் தரப்பினர் தெரிவித்த நிலையில், கரம்பக்காட்டை சேர்ந்த விவசாயியான ராமசாமி தரப்பினருக்கும், ராஜகோபால் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் மோதல் ஆகி அவர்களுக்குள் கை கலப்பானது.
மறியல்
இதில் ராஜகோபால் தரப்பினர், ராமசாமியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ராமசாமி அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ராமசாமி கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து ராமசாமியை தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமசாமி தரப்பினர் ஆவணம் கைகாட்டி- பேராவூரணி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு தீபக் ரஜினி மற்றும் கீரமங்கலம் வருவாய் ஆய்வாளர் ரவி, கீரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ராமசாமியை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் ஆவணம் கைகாட்டி- பேராவூரணி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.