உடலில் மண்எண்ணெய் ஊற்றிக் ெகாண்டு அ.தி.மு.க. கவுன்சிலர் போராட்டம்
கமுதி யூனியன் கூட்டத்தில் உடலில் மண்எண்ணெய் ஊற்றிக் ெகாண்டு அ.தி.மு.க. கவுன்சிலர் போராட்டம் செய்ததால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
கமுதி,
கமுதி யூனியன் கூட்டத்தில் உடலில் மண்எண்ணெய் ஊற்றிக் ெகாண்டு அ.தி.மு.க. கவுன்சிலர் போராட்டம் செய்ததால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
யூனியன் கூட்டம்
கமுதி யூனியன் கூட்டம் யூனியன் தலைவர் தமிழ்செல்வி போஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு துணைத் தலைவர் சித்ராதேவி அய்யனார் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிமேகலை, ராஜகோபால் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள், மின்வாரியம் உள்பட பல்வேறு துறை சார்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்துகொண்ட பேரையூர் கவுன்சிலர் அன்பரசு தனது ஒன்றிய கவுன்சிலுக்கு உட்பட்ட பகுதியில், நூலககட்டிடம், உயர்கோபுர விளக்கு மற்றும் பல்வேறு அடிப்படைத் தேவைகளுக்கானபணிகளை நிறைவேற்ற கடந்த 3 வருடங்களாக கோரிக்கை வைத்தும், நிதி ஒதுக்க வில்லை. இதனால் எனக்கு வாக்களித்த எனது கவுன்சிலுக்கு உட்பட்ட பகுதி மக்களுக்கு, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாமல் திணறி வருகிறேன்.
பரபரப்பு
கோரிக்கை மனுவை கடைசியாக இந்த கூட்டத்தில் கொடுக்கிறேன் என்று கூறிக் கொண்டே திடீரென கையில், வாட்டர் பாட்டில் ஒன்றில் வைத்திருந்த மண்எண்ணெய்யை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை தடுத்து தண்ணீரை ஊற்றினர். பின்னர் தரையில் அமர்ந்தபடி தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் கூட்ட அரங்கில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கவுன்சிலர் அன்பரசு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். இது குறித்து ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்வி போஸ் கூறியதாவது:- பேரையூர் கவுன்சிலுக்கு உட்பட்ட பகுதிகளில் அதிக நிதி ஒதுக்கப்பட்டு ஏராளமான பணிகள் நடந்துள்ளது என்று கூறினார். இதில் பேரையூர் ஊரணியை சுற்றிலும் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் தடுப்புச்சுவர், படித்துறை அமைக்கப்பட்டு உள்ளது.
அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 51 லட்சத்தில் குடிநீர், குறுங்காடு, கழிவுநீர் வாருகால் வசதி, மயான சாலை உட்பட ஏராளமான பணிகள் நடைபெற உள்ளது. பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது கவுன்சிலர் அன்பரசு கூறுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று கூறினார்.