உசிலம்பட்டி அருகே குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் அடுத்தடுத்து சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு


உசிலம்பட்டி அருகே குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் அடுத்தடுத்து சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
x

உசிலம்பட்டி பகுதியில் குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் அடுத்தடுத்து சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மதுரை

உசிலம்பட்டி


சாலை மறியல்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீழமாதரை கிராமத்தில் கடந்த 3 மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கைகளும் எடுக்காத நிலையில் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் போலீசார் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

இதே போன்று உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 1-வது வார்டு இருளாயி நகரில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முறையான குடிநீர் வழங்காததைக் கண்டித்தும் அப்பகுதி பொதுமக்கள் காலி குடங்களுடன் மதுரை-தேனி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் போலீசார் மற்றும் நகராட்சி அலுவலர்கள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து இரு கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story