ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் கடலூரில் பரபரப்பு


ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் கடலூரில் பரபரப்பு
x
தினத்தந்தி 8 April 2023 6:45 PM GMT (Updated: 8 April 2023 6:46 PM GMT)

கடலூரில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

கடலூர் ஆல்பேட்டை தென்பெண்ணையாற்றின் குறுக்கே நெடுஞ்சாலைத்துறை சார்பில் பாலம் கட்டும் பணியும், பெரியகங்கணாங்குப்பத்தில் இருந்து மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு வரை சாலை விரிவாக்க பணிகள் மற்றும் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இதில் சாலை விரிவாக்க பணிக்காக ஆல்பேட்டையில் சுமார் 43 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முடிவு செய்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர்.

அப்போது தங்களுக்கு மாற்று இடம் கொடுத்துவிட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளுங்கள் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக மாவட்ட கலெக்டரிடமும், மனு அளித்தனர். அப்போது 43 குடும்பத்தினருக்கும், குண்டு சாலையில் உள்ள குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கி தருவதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்திருந்தார்.

பொதுமக்கள் போராட்டம்

இதற்கிடையே ஆல்பேட்டையில் இருந்த பயணிகள் நிழற்குடையை நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் நேற்று முன்தினம் இடித்து அகற்றினர். இந்த நிலையில் சாலை விரிவாக்க பணிக்காக நேற்று காலை பொக்லைன் எந்திரம் மூலம் அதிகாரிகள் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற முயன்றனர். இதுபற்றி அறிந்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே கடலூர் புதுநகர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், குடிசை மாற்று வாரியத்தில் தங்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்காக அதிகாரப்பூர்வமான சான்று வழங்கினால், தாங்களே வீடுகளை காலி செய்து விடுவதாகவும், இல்லையெனில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்து விட்டு கலைந்து சென்றனர். இதனால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story