நிதி குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும்
விழுப்புரம் மாவட்டத்தில கடந்த 4 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத நிதி குறித்த விவரங்களை புள்ளி விவரத்துடன் தெரிவிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் மோகன் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொது கணக்குக்குழு தணிக்கை தொடர்பான முன்னாய்வு கூட்டம் கலெக்டர் மோகன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:- தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், பணிகள் குறித்து ஆய்வு செய்ய பொதுகணக்கு தணிக்கைகுழுவினர் வருகிற 14-ந்தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளனர்.
எனவே விழுப்புரம் மாவட்டத்தில் திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியினங்கள், கடந்த 4 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத நிதி, நிலுவைநிதி, பயனாளிகளிடமிருந்து கோரப்படாத நிதி குறித்தும், மாவட்ட ஊரகவளர்ச்சி முகமையின் மூலம் மேற்கொள்ளப்பட்ட சாலை பணிகள், அளவீடுகள், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள கால்நடைகளின் எண்ணிக்கை, கால்நடை வளர்ப்போர் விவரம், கால்நடைகளை பராமரித்திட உள்ள மருத்துவமனைகள், மருத்துவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும்.
புள்ளி விவரங்கள்
மேலும் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட சாலை பராமரிப்பு பணிகள், புதிய சாலைப்பணிகள், பொதுப்பணித்துறையின் சார்பில் கட்டப்பட்டுவரும் புதிய கட்டிடங்கள், பணிகள்தன்மை, அனுமதிக்காக அனுப்பப்பட்ட பணிகள் பற்றியும்,. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்வழங்கல்துறை சார்பில் 3 நகராட்சிகளில் உள்ள மக்கள் தொகைக்கேற்ப வழங்கப்பட்டு வரும் குடிநீர்அளவு, கழிவுநீர் வடிகால்வசதி, சாலைவசதி, தூய்மைப்பணிகள் உள்பட அரசில் பல்துறைகள் சார்பில் செய்யப்பட்டு வரும் பணிகள் குறித்த விவரங்களை புள்ளி விவரங்களுடன் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும் என்றார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, ஊரகவளர்ச்சிமுகமை திட்டஇயக்குனர் சங்கர் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.