போலி டாக்டர்கள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க புதிய வசதி -அரசு டாக்டர்கள் சங்க மாநில தலைவர் பேட்டி


போலி டாக்டர்கள் குறித்து பொதுமக்கள்   புகார் அளிக்க புதிய வசதி -அரசு டாக்டர்கள் சங்க மாநில தலைவர் பேட்டி
x

போலி டாக்டர்கள் குறித்து புகார் அளிக்க புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநில தலைவர் செந்தில் கூறினார்.

மதுரை


போலி டாக்டர்கள் குறித்து புகார் அளிக்க புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநில தலைவர் செந்தில் கூறினார். இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

போலி டாக்டர்கள்

தமிழகத்தில் போலி டாக்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. மாவட்டம் தோறும் இதுபற்றி கண்காணித்து மாவட்டத்தில் உள்ள இணை இயக்குனர்கள், போலீசார் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், நேஷனல் மெடிக்கல் கமிஷன் சட்டம் 2019, பிரிவு 34 மற்றும் 54-ன் படி தமிழ்நாடு மருத்துவ கவுன்சில், போலி டாக்டர்களுக்கு எதிராக புதிய நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுஉள்ளது.

இந்த புதிய சட்டத்தின்படி முறையாக எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்பு படிக்காமல், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு பெறாமல், அலோபதி மருத்துவம் செய்து வரும் போலி டாக்டர்கள் மீது இந்த சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கலாம். அதற்கு மூத்த வக்கீல்கள் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது அந்த குழுவினர் தமிழகத்தில் 3 பிரிவுகளாக பிரிந்து பணியாற்றுகின்றனர்.

ரூ.5 லட்சம் அபராதம்

இந்த சட்டத்தின்படி குற்றம் நிரூபிக்கப்படுபவர்களுக்கு கோர்ட்டு ஒரு வருடம் சிறை தண்டனை விதிக்கலாம் அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது 2-ம் சேர்ந்து தண்டனையாக வழங்கலாம். கடந்த 1½ மாதங்களில் சுமார் 60-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. அவைகள் குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. முழுமையான விசாரணைக்கு பின்னர் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த சட்டத்தின்படி, கடந்த மாதம் சேலத்தில் பி.எச்.எம்.எஸ். படித்துவிட்டு டி.ஆர்தோ என்ற அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழை ஏதோ ஒரு நிறுவனத்தில் இருந்து பெற்றுக்கொண்டு, தான் ஒரு எலும்பு நோய் சிறப்பு டாக்டர் எனக்கூறி பொது மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி டாக்டர் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

சிகிச்சை

இதுபோல், காரைக்குடியில் எம்.பி.பி.எஸ். படிக்காத ஒருவர், இருதய டாக்டர் என்று கூறிக்கொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்துள்ளார். அவர் மீதும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. வரும் காலங்களில் போலி டாக்டர்கள் குறித்து பொதுமக்கள் புகார்அளிக்கலாம். அதன் மூலம் போலி டாக்டர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும்.

மின்னஞ்சல் மூலம்...

அதன்படி, போலி டாக்டர்கள் பற்றிய புகார்களை quackery@tamilnadumedi calcouncil.org என்ற தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் மின்னஞ்சல் மூலம் பொதுமக்கள் புகார்கள் அனுப்பலாம். அவை விசாரிக்கப்பட்டு, உரிய முகாந்திரம் மற்றும் சாட்சியங்கள் இருக்கும் பட்சத்தில் அவற்றை போலி டாக்டர்கள் ஒழிப்பு சட்ட பிரிவினருடன் ஆலோசித்து போலி டாக்டர்கள் மீது வழக்கு தொடரப்படும்.

வருங்காலத்தில் மாவட்டந்தோறும் போலி டாக்டர்கள் குறித்த புகாரை விசாரிக்க நடவடிக்கை எடுக்க கூடுதலாக அலுவலர்கள் நியமிக்கப்பட இருக்கின்றனர்.

புகார்

நாளடைவில் போலி டாக்டர்களே இல்லை என்ற அளவிற்கு தமிழகம் மாறுவதற்கு முழு முயற்சியில் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களும், தாங்கள் செல்லும் டாக்டர்கள் முறையாக படித்தவர்களா, பதிவு பெற்றவர்களா ஆராய்ந்து சிகிச்சை பெற வேண்டும். சந்தேகம் இருக்கும் பட்சத்தில், அவர்கள் மீது உரிய ஆவணங்களுடன் புகார் அளிக்கலாம். அதுகுறித்த உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால் போலி டாக்டர்களே இல்லை என்ற நிலைக்கு கொண்டுவரலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story