குடிநீர் திட்டப்பணிகளை ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்


குடிநீர் திட்டப்பணிகளை ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்
x

தவுட்டுப்பாளையத்தில் குடிநீர் திட்டப்பணிகளை ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கரூர்

கிணறுகளில் தண்ணீர் வற்றியது

தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் சார்பில் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து அரவக்குறிச்சி பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக 50 அடிக்கும் மேல் பள்ளம் தோண்டி கட்டுமான பணிகள் நடைபெறுகிறது. இதனால் நஞ்சை புகழூர், தவுட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள கிணறுகளில் தண்ணீர் வற்றிவிட்டன.

இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பணிகள் நடைபெறும் இடத்திற்கு கடந்த 11-ந்தேதி சென்று சம்மந்தப்பட்ட அதிகாரிகளை முற்றுகையிட்டு குடிநீர் திட்ட பணிகள் நடைபெறுவதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. இதனால் அந்த பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது காவிரி ஆற்றில் நடைபெற்று வரும் குடிநீர் திட்ட பணிகளை உடனடியாக நிறுத்தி வைப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அதிகாரிகளுடன் வாக்குவாதம்

இதையடுத்து நேற்று கரூர் கோட்டாட்சியர் ரூபினா தலைமையில், புகழூர் தாசில்தார் முருகன் மற்றும் அதிகாரிகள் தவுட்டுப்பாளையத்தில் குடிநீர் பணிகளை பார்வையிட்டனர். அப்போது, அங்கு வந்த பொதுமக்கள், குடிநீர் திட்ட பணிகளை மீண்டும் தொடங்கினால் எங்களுக்கு குடிநீர் கிடைப்பதில் சிரமம் ஏற்படும், எனவே இந்த திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றனர்.

அப்போது, குடிநீர் திட்ட பணிகளை தடுக்க முடியாது, குடிநீர் கிடைக்க வழிவகை செய்கிறோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, புகளூர் தாசில்தார் அலுவலகத்தில் இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. தற்போது வரை குடிநீர் திட்ட பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story