மெரினா கடற்கரைக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்கவும் - மாநகராட்சி எச்சரிக்கை
மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை பகுதிகளுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.
சென்னை,
மாண்டஸ் புயல் தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 550 கிலோமீட்டர் தொலைவிலும், கரைக்காலுக்கு கிழக்கு தென்கிழக்கிற்கு சுமார் 460 கிலோமீட்டர் தொலைவிலும் நிலைக் கொண்டுள்ளது.
இதுதொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடும். தற்போதைய நிலவரப்படி நாளை இரவு புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிக்கோட்டாவிற்கு இடைப்பட்ட பகுதிகளில் கரையை கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் காரணமாக வரும் 10-ம் தேதிவரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாண்டஸ் புயல் கரையை நெருங்கி வருவதால் சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மெரினா, பெசன்ட் நகர் போன்ற கடற்கரை பகுதிகளுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். மேலும், புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், மரங்களின் அருகாமையில் நிற்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
பொதுமக்களின் அவசர தேவைக்காக உதவி எண்கள், 1913, 044-25619206, 044-25619207, 044-25619208, 9445477205 ஆகியவற்றை தொடர்புகொள்ளவும் அறிவிக்கப்பட்டுள்ளன.