இ-சேவை மையத்தை பொதுமக்கள் முற்றுகை


இ-சேவை மையத்தை பொதுமக்கள் முற்றுகை
x

கலைஞர் உரிமை தொகை திட்ட இணையதளம் முடங்கியதால், கும்பகோணம் தாசில்தார் அலுவலக இ-சேவை மையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் சம்பவ இடத்தில் வருவாய் கோட்டாட்சியா் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

தஞ்சாவூர்

கும்பகோணம்;

கலைஞர் உரிமை தொகை திட்ட இணையதளம் முடங்கியதால், கும்பகோணம் தாசில்தார் அலுவலக இ-சேவை மையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் சம்பவ இடத்தில் வருவாய் கோட்டாட்சியா் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

உரிமை தொகை

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை கடந்த மாதம் 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் பயன்பெற தமிழகம் முழுவதும் பெண்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் கும்பகோணத்திலும் ஏராளமான பெண்கள் விண்ணப்பித்திருந்தனர்.

இணையதளம் முடங்கியது

அதில் குறிப்பிட்ட பெண்களுக்கு உரிமை தொகை கிடைத்திருந்தது. சிலருக்கு கிடைக்கவில்லை. இதனால் உரிமைதொகை கிடைக்காதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்றும், புதிதாக விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்திருந்தது. இதனால் கும்பகோணம் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பெண்கள் குவிந்தனர். காலை 6 மணி முதல் டோக்கன் பெற வந்த பெண்கள் 10 மணி வரை காத்திருந்தனர்.இந்த நிலையில், மேல் முறையீடு மற்றும் புதிய விண்ணப்பங்கள் பதிவு செய்ய பெண்கள் குவிந்ததால் இணைய தளம் முடங்கியது. இதனால் காலை 6 மணி முதல் 10 மணி வரை காத்திருந்த பெண்கள் ஆத்திரமடைந்தனர். உடனே அவர்கள் தாசில்தார் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

வாக்குவாதம்

உடனே இ- சேவை மையத்தில் பணியாற்றுபவர்கள் சிறிது நேரம் காத்திருங்கள் இணையதளம் சரியாகிவிடும் என்றனர். இதனால் அவர்கள் மறியலை கைவிட்டு மீண்டும் இ- சேவை மையத்தின் முன்பு வந்தனர். அப்போதும் இணையதளம் சரியாகாததால் இ- சேவை மையத்தை முற்றுகையிட்டு மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய் கோட்டாட்சியர் பூர்ணிமா மற்றும் கிழக்கு போலீசார் முற்றுகையிட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து பெண்கள் அங்கிந்து கலைந்து சென்றனர்.இதுகுறித்து தாசில்தார் அலுவலகம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள நோட்டீசில் கூறப்பட்டுள்ளதாவது:-

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் புதிய விண்ணப்பங்கள் அளிக்க தற்போது இணையதளம் முடங்கியுள்ளதால் விண்ணப்பிக்க இயலாது மனுதாரர்கள் தங்களது வீட்டின் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் உள்ள இ- சேவை மையங்களை தொடர்பு கொள்ள வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.


Next Story