நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
செல்போன் கோபுரம்
வாணியம்பாடி நகராசிக்குட்பட்ட பெருமாள்பேட்டை பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் புதிதாக செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
செல்போன் கோபுரம் அமைத்தால் அதில் இருந்து வரும் கதிர்வீச்சினால் குழந்தைகள், முதியோர்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபயாம் உள்ளதாகவும், செல்போன் கோபுரம் அமைக்கும் அடுக்குமாடி குடியிருப்பு மிகவும் பாழடைந்த கட்டிடம் என்பதால் எந்தநேரத்திலும் கட்டிடம் இடிந்து விழும் அபாயம் உள்ளதாக கூறி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
முற்றுகை
இந்த நிலையில் பெருமாள்பேட்டை பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து நகராட்சி அதிகாரியிடம் இது தொடர்பாக மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.