காட்டுக்கோட்டை கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டம்


காட்டுக்கோட்டை கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
x
சேலம்

தலைவாசல்:-

காட்டுக்கோட்டை கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். புதிதாக சேகோ ஆலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேறியது.

கிராமசபை கூட்டம்

தலைவாசல் ஒன்றியம் காட்டுக்கோட்டைஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ராமர் முன்னிலை வகித்தார். என்ஜினீயர் ராஜ்குமார், கிராம நிர்வாக அலுவலர் முனியப்பன் மற்றும் கால்நடை, வேளாண்மைத்துறை, கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் புதிதாக சேகோ ஆலை கட்ட அனுமதி அளிக்க கூடாது என்றும், இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறி பொதுமக்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

தொடர்ந்து நடந்த கூட்டத்தில் சேகோ ஆலை குறித்து எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் திடீரென கூட்டத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கூட்டம் நடத்திய அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

தீர்மானம் நிறைவேற்றம்

தகவல் அறிந்த மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு பிரிவு) கலைச்செல்வி, தாசில்தார் ஜெயக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோ, போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகுராணி, ரூரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் அதிகாரிகள் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

தொடர்ந்து சேகோ ஆலை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று கூட்டத்தில் ஊராட்சி தலைவர் அன்பழகன் அறிவித்தார். பொதுமக்கள் சார்பில் ஊராட்சி நிர்வாகத்துக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. பின்னர் போராட்டம் நடத்தியவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

கம்மாளப்பட்டி ஊராட்சி

பனமரத்துப்பட்டி ஒன்றியம் கம்மாளப்பட்டி ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்துக்கு ஊராட்சி தலைவர் ஆனந்தாயி தலைமை தாங்கினார். வட்டார ஊர் நல அலுவலர் மணிவேல் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் 7 பேர் வாயில் கருப்பு துணி கட்டி கொண்டு கலந்து கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் கிராமசபை கூட்டத்தில் கொடுத்த மனுவில், கம்மாளப்பட்டி நீர் தேக்கத்துக்கு வரும் நீர்வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அனைத்து பகுதிகளிலும் சீரான குடிநீர் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இடம் பெற்று இருந்தன.

இதேபோல் தாசநாயக்கன்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி துணைத் தலைவர் செந்தில்குமார் பேசும் போது, கலந்து கொண்டவர்களில் சிலருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.


Next Story