டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
நாகையில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெளிப்பாளையம்:
நாகையில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் கடை
நாகை பழைய பஸ் நிலையம் அருகே திருமேனிசெட்டித்தெரு பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து மதுபானம் வாங்கும் மதுபிரியர்கள் சாலையில் நின்று மதுகுடிக்கின்றனர். அப்போது அந்த வழியாக செல்லும் பெண்கள், குழந்தைகள், முதியோர்களிடம் தகராறு செய்கின்றனர்.
குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அந்தபகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
முற்றுகை போராட்டம்
இந்த நிலையில் அப்பகுதி பொதுமக்கள் ஒன்று திரண்டு டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த நாகை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து உதவி ஆணையர் (கலால்) குணசேகரன் சம்பவ இடத்திற்கு பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் டாஸ்மாக் கடை விரைவில் அகற்றப்படும் என தெரிவித்தார். அப்போது கடை வேறு இடத்திற்கு மாற்றும் வரை மதுபானங்கள் விற்பனை செய்ய கூடாது என பொதுமக்கள் கோஷங்கள் எழுப்பினர்.
பேச்சுவார்த்தை
தொடர்ந்து பதற்றம் நிலவியதால் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நாகை நகர்மன்ற தலைவர் மாரிமுத்து ஆகியோர் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் டாஸ்மாக்் கடை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்படும். கடை மாற்றப்படும் வரை இந்த பகுதியில் மதுஅருந்த அனுமதி மறுக்கப்படும். இதை கண்காணிக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.