பாக்கெட்டுக்கு பதில் பாட்டில்களில் ஆவின் பால் விற்பனை சாத்தியப்படுமா?; பொதுமக்கள் கருத்து


பாக்கெட்டுக்கு பதில் பாட்டில்களில் ஆவின் பால் விற்பனை சாத்தியப்படுமா?; பொதுமக்கள் கருத்து
x
தினத்தந்தி 28 Feb 2023 8:30 PM GMT (Updated: 28 Feb 2023 8:30 PM GMT)

சென்னை ஐகோர்ட்டு யோசனை படி ஆவின் பாலை பாக்கெட்டுக்கு பதில் பாட்டில்களில் விற்பனை செய்வது சாத்தியபடுமா என்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தேனி

ஆவின் நிறுவனம் ஆரம்பித்த காலத்தில் முதலில் பாட்டில்கள் மூலமே பால் விற்பனை செய்யப்பட்டு வந்தது. நாளடைவில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யும் நடைமுறை அமலுக்கு வந்தது.

தற்போது ஆவின் நிறுவனம் கொழுப்புச் சத்து செறிவூட்டப்பட்ட பாலை ஆரஞ்சு நிற பாக்கெட்டிலும், நிலைப்படுத்தப்பட்ட பாலை பச்சை நிற பாக்கெட்டிலும், சமன்படுத்தப்பட்ட பாலை நீல நிற பாக்கெட்டிலும், இரு முறை கொழுப்புச்சத்து நீக்கப்பட்ட பாலை மெஜந்தா நிற பாக்கெட்டிலும் தரம் பிரித்து, விற்பனை செய்து வருகிறது.

நாள் ஒன்றுக்கு தமிழ்நாடு முழுவதும் 27 ஒன்றியங்கள் மூலமாக 29 லட்சம் லிட்டர் பாலை, ¼, ½, 1 லிட்டர்களில் 63 லட்சம் பாக்கெட்டுகளை மக்களுக்கு விற்பனை செய்து வருகிறது.

ஐகோர்ட்டு யோசனை

பால் பாக்கெட்டுகளை பயன்படுத்திவிட்டு, மீண்டும் திருப்பி ஒப்படைத்தால் ஒரு பாக்கெட்டுக்கு 10 பைசா வழங்கும் திட்டமும் ஆவின் அறிவித்திருந்தது. தற்போது அந்த நடைமுறை மருவிப்போய்விட்டது.

இதனால் அன்றாடம் பயன்படுத்தும் 63 லட்சம் ஆவின் பால் பாக்கெட்டுகள் பயன்படுத்திய பிறகு, குப்பை மேட்டுக்கு வந்துவிடுகின்றன. இவ்வாறாக சேரும் பிளாஸ்டிக் கவர்கள் பெரிய சீரழிவை பிற்காலத்தில் தரக்கூடியது.

ஏற்கனவே பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அது தொடர்பான வழக்கு விசாரணையில், சென்னை ஐகோர்ட்டு ஒரு யோசனையை தெரிவித்திருந்தது.

கண்ணாடி பாட்டிலில்...

ஆவின் பாலை பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்வதற்கு பதிலாக, கண்ணாடி பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்வது பற்றி ஆராயும்படி, அரசு தரப்பு வக்கீலுக்கு நீதிபதிகள் அறிவுரை வழங்கினார்கள்.

மேலும் முதற்கட்டமாக ஏதேனும் ஒரு மாநகராட்சி அல்லது ஒரு பகுதியைத் தேர்வு செய்து அங்கு சோதனை அடிப்படையில் கண்ணாடி பாட்டில்களில் ஆவின் பாலை விற்பனை செய்வது குறித்து ஆலோசிக்கவும் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் பால்வளத்துறையிடமும், ஆவின் நிறுவனத்திடமும் கருத்துகளை கேட்பதாக, அரசு தரப்பு வக்கீல் நீதிபதிகளிடம் தெரிவித்தார். இந்த விசாரணை மீண்டும் வருகிற 8-ந்தேதி வர இருக்கிறது.

சென்னை ஐகோர்ட்டு கூறியிருக்கும் இந்த யோசனை சாத்தியப்படுமா? என்பது பற்றி தேனியை சேர்ந்த பொது மக்களிடமும், பால் முகவர்கள், வியாபாரியிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

நன்கு ஆராய வேண்டும்

கடமலைக்குண்டுவை சேர்ந்த ஆவின் பால் முகவர் சரவணன் கூறும்போது, "ஆவின் பாலை பாக்கெட்டில் விற்பனை செய்யும் போது, அதற்கு அதிக இடவசதி தேவைப்படவில்லை. ஆனால், பாட்டிலில் வைத்து விற்பனை செய்வதாக இருந்தால் அதற்கு என்று கூடுதலாக பிரிட்ஜ் வாங்க வேண்டும். பாட்டிலில் பால் கொண்டு வரும் போதும், விற்பனை செய்யும் போதும் சேதம் அடைய வாய்ப்புள்ளது. செலவினங்கள் அதிகரிக்கும். பாட்டில் விலையையும் சேர்த்து விற்பனை செய்வதால் விலை அதிகரிக்கும். பாட்டில் வாங்கிச் சென்றால் உடைந்து விடும் என்ற மனநிலையால் தனியார் நிறுவனங்களின் பாக்கெட் பால் வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு மக்கள் தள்ளப்படுவார்கள். அதனால், ஆவின் விற்பனை குறையலாம். தற்போதைய கால கட்டத்தில் பாட்டிலில் பால் வினியோகம் செய்வது சாத்தியப்படாது. எனவே நன்கு ஆராய்ந்து இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும்" என்றார்.

சின்னமனூரை சேர்ந்த பேக்கரி கடைக்காரர் பாலமுருகன் கூறும்போது, "பேக்கரிகள், டீக்கடைகளில் டீ, காபி மற்றும் பாலில் செய்யும் இனிப்பு வகைகள் தயாரித்தல் போன்றவற்றுக்கு பாலின் தேவை அதிகம் உள்ளது. தற்போதைய சூழலில் மோட்டார் சைக்கிளில் சென்று தேவையான அளவுக்கு பால்பாக்கெட் வாங்கி வர முடிகிறது. பாட்டிலில் அடைத்து விற்பனை செய்வதாக இருந்தால் அவற்றை வாங்கி வருவதற்கு வேறு வாகன ஏற்பாடு செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். மேலும், அவற்றை பயன்படுத்திவிட்டு பாட்டில்களை பத்திரப்படுத்துவதும் சிரமமான சூழலை ஏற்படுத்தும். எனவே, தொழில் பாதிப்பு ஏற்படாத வகையில் யோசித்து முடிவு செய்ய வேண்டும்" என்றார்.

சாத்தியப்படுமா?

உப்புக்கோட்டையை சேர்ந்த தனியார் பள்ளி ஊழியர் சிவகுரு கூறும்போது, "சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி பாக்கெட்டுக்கு மாற்றாக பாட்டிலில் பால் விற்பனை செய்வது நல்ல விசயம் தான். ஆனால், நடைமுறைக்கு அது சாத்தியப்படுமா? என்று தெரியவில்லை. பெரும்பாலும் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள கடைகளுக்கு சிறுவர், சிறுமிகள் சென்று பால் பாக்கெட் வாங்கி வருகின்றனர். பாட்டிலில் விற்பனை செய்யப்பட்டால் வாங்கி வரும்போதே உடைத்து விடும் அபாயம் உள்ளது. மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்திய பிறகு இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தலாம். இல்லையேல் இது தோல்வியில் முடிந்து விட வாய்ப்புள்ளது" என்றார்.

சுற்றுச்சூழலுக்கு உகந்தது

ராயப்பன்பட்டியை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் மணிமாறன் கூறும்போது, "மனிதர்கள் காலம் காலமாக தங்களின் தேவைக்கும், சொகுசான வாழ்வுக்காகவும் இயற்கை வளங்களை பல வழிகளில் அழித்து விட்டனர். இதனால், மண், காற்று, நீர் போன்றவை மாசுபட்டுள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டால் மண்ணும், நீர்நிலைகளும் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகிறது. பாக்கெட்டில் பால் விற்பனை செய்வதை விட, பாட்டிலில் விற்பனை செய்வது சுற்றுச்சூழலுக்கு உகந்தது. ஆனால், அதை செயல்படுத்துவதில் கவனமுடன் செயல்பட வேண்டும். இயற்கையோடு இணைந்து வாழ்வது தான் ஆரோக்கியமான வாழ்க்கை. இனி வரும் காலங்களில் இயற்கை வளங்களை பாதுகாப்பது ஒருபுறம் இருந்தாலும், மேற்கொண்டு இயற்கை வளங்களை அழிக்காமல் இருக்க வேண்டியதும் முக்கியமானது. எனவே பாட்டிலில் பால் விற்பனை செய்வதை ஊக்குவிக்கலாம்" என்றார்.


Related Tags :
Next Story