ரேஷன் கடைகளில் கூடுதலாக என்னென்ன பொருட்கள் தேவை?; பொதுமக்கள் கருத்து
ரேஷன் கடைகளில் கூடுதலாக என்னென்ன பொருட்கள் தேவை? என்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் மானிய விலையில் கிடைப்பதால், சாதாரண மக்கள் முதல் நடுத்தர வர்க்கத்தினரும் அங்கு உணவு பொருட்களை வாங்கிப் பயன்படுத்துகிறார்கள்.
கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பகல் நேரங்களில் ரேஷன் கடைகளுக்கு பொதுமக்கள் வருகை குறைவாக காணப்படுகிறது. காலையில் 8.30 மணியில் இருந்து பகல் 12.30 மணி வரையிலும், மாலையில் 3 மணியில் இருந்து இரவு 7 மணி வரையிலும் கடை திறந்திருக்க வேண்டும். இருந்தாலும் பொதுமக்கள் பகல் பொழுதில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் காலையில் 9 மணிக்கு உள்ளாகவும், மாலை 4 மணிக்கு மேலும்தான் ரேஷன் கடைகளுக்கு செல்கின்றனர். இதனால் பகல் நேரங்களில் பெரும்பாலான ரேஷன் கடைகள் வெறிச்சோடியே காணப்படுகின்றன. மாலையில் பரபரப்பாக மாறி விடுகின்றன.
ரேஷன் கடைகளில் வழக்கமாக வழங்கிவரும் பொருட்களுடன் கூடுதலாகவும் சில உணவுப் பொருட்களை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகிறார்கள்.
தற்போது வழங்கப்படும் பொருட்கள் தரமாகவும், எடை சரியாகவும் இருக்கிறதா? கூடுதலாக என்ன பொருட்கள் தேவைப்படுகிறது? போன்றவை குறித்து இங்கே பலர் பல்வேறு கருத்துகளை கூறுகின்றனர். அதன் விவரங்களை காண்போம்.
சிறுதானியங்கள்
திண்டுக்கல் என்.ஜி.ஓ.காலனியை சேர்ந்த மஞ்சுளா:- ரேஷன்கடைகள் மக்களின் வாழ்வாதாரமாக இருக்கிறது. அரிசி, கோதுமை, பச்சரிசி உள்ளிட்ட பொருட்கள் தரமாக இருக்கின்றன. ஒருசில நேரங்களில் மட்டுமே சுமாரான பச்சரிசி, கோதுமை வழங்கப்படுகிறது. அதை மட்டும் தவிர்த்து விட்டால் ரேஷன் பொருட்களின் தரத்தை குறையே சொல்ல முடியாது என்ற நிலை ஏற்படும். சிறுதானிய உற்பத்தியை பெருக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. எனவே பயறு வகைகள், சிறு தானியங்களை ரேஷன்கடைகளில் விற்பனை செய்தால் அனைத்து தரப்பு மக்களும் வாங்குவார்கள். அதன் தேவை அதிகரித்தால் விவசாயிகள் ஆர்வமுடன் விற்பனை செய்வார்கள். இதுதவிர ரேஷன்கடைகளில் மளிகை பொருட்களையும் பாக்கெட் செய்து விற்றால் நன்றாக இருக்கும்.
கோதுமை கிடைப்பதில்லை
வேடசந்தூர் அய்யப்பாநகரை சேர்ந்த மகாலட்சுமி:- ரேஷன்கடைகளில் அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில், துவரம்பருப்பு, கோதுமை ஆகியவற்றுடன் சேர்த்து சோப்பு வகைகள், உப்பு, நாட்டு சர்க்கரை, மைதா, கோதுமை மாவு, ரவை, டீத்தூள் போன்றவற்றையும் விற்கின்றனர். ஆனால் ரேஷன் பொருட்களை தவிர இதர பொருட்கள் நாம் வழக்கமாக வாங்கும் பிராண்டாக இல்லை. இதனால் ரேஷன் பொருட்களை தவிர மற்ற பொருட்களை வாங்குவது இல்லை. முன்பு எந்த நாளில் சென்றாலும் கோதுமை கிடைத்தது. ஆனால் தற்போது கோதுமை கிடைப்பதே அரிதாக இருக்கிறது. ரேஷன் கடைகளை பலசரக்கு கடையாக மாற்றினால் மக்களுக்கு அனைத்து பொருட்களும் நியாயமான விலையில் கிடைக்கும். அதன்மூலம் அரசுக்கும் வருவாய் கிடைக்கும்.
கம்பு, கேழ்வரகு
நத்தம் காமராஜர்நகரை சேர்ந்த ராதிகா:- ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களுடன் மசாலா பொடி பாக்கெட்டுகள், உப்பு போன்றவையும் விற்கப்படுகின்றன. இதேபோல் இதர மளிகை பொருட்களையும் விற்றால் நன்றாக இருக்கும். மேலும் கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட சிறு தானியங்களை விற்பனை செய்தால் அனைவரும் வாங்க முன்வருவார்கள். வெயில் காலமாக இருப்பதால் கடைகளில் கம்பு, கேழ்வரகு வாங்கி கூழ் தயார் செய்கிறோம். அதுவே ரேஷன்கடையில் விற்றால் விலை குறைவாக இருக்கும். சிறுதானியங்களை விற்பனை செய்வதால் விவசாயிகளும் பயன்பெறுவார்கள். மேலும் கருப்பட்டி விற்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
உளுத்தம்பருப்பு
வசந்தா (பழனி, வில்வாதம்பட்டி):- ரேஷன்கடைகளில் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்பட அனைத்து பொருட்களும் கிடைக்கிறது. தற்போது வழங்கப்படும் புழுங்கல் அரிசி மிகவும் நன்றாக இருக்கிறது. ஆனால் ஒருசில நேரம் பச்சரிசி, கோதுமை போன்றவை விரைவாக தீர்ந்து விடுகின்றன. இதனால் அவை அனைத்து மக்களுக்கும் கிடைப்பது இல்லை. அதிலும் 15-ந்தேதிக்கு முன்பே தீர்ந்து விடுவதால் ஏமாற்றம் ஏற்படுகிறது. எனவே மாதம் முழுவதும் எப்போது சென்றாலும் பொருட்கள் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உளுத்தம் பருப்பு தற்போது வழங்கப்படுவது இல்லை. அதை மீண்டும் வழங்கினால் மிகவும் நன்றாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தரக்கட்டுப்பாட்டு அலுவலர்கள்
இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்கள் கூறும்போது, 'ரேஷன் கடைகளுக்கு சில நேரங்களில் தரமில்லாத அரிசி வருவது வழக்கம்தான். நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து, ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசி தரமாக இருப்பதை, தரக்கட்டுப்பாட்டு அலுவலர்கள் தான் முடிவு செய்கிறார்கள். அரிசி தரமில்லை என்றால் அதற்கான பொறுப்பை அவர்களே ஏற்க வேண்டும். மாறாக ரேஷன் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது.
ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் அரிசி மூட்டைகளில் குறைந்தது 5 கிலோ எடை குறைவாகத்தான் வருகிறது. இதேபோல்தான் மற்ற பொருட்களிலும் எடை குறைவு உள்ளது. எனவே அனைத்து நுகர் பொருள் வாணிப கிடங்குகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும்' என்றனர்.
கண்காணிப்பு குழு
உணவுத்துறை அதிகாரிகள் கூறும்போது, 'தமிழகத்தில் 2.19 கோடிக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன. இவற்றுக்கு கூட்டுறவு மற்றும் உணவுத் துறையின் கீழ் செயல்படும் 35 ஆயிரத்து 296 ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் இருந்து அனைத்து மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அரிசி, பருப்பு, சக்கரை, கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் வழங்குவதை உறுதி செய்யும் வகையில் ஒரு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்தக், குழுவின் ஒருங்கிணைப்பாளராக மாவட்ட வழங்கல் அலுவலரும், உறுப்பினர்களாக நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர், கூட்டுறவுத் துறை மண்டல இணைப் பதிவாளர், குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளர் ஆகிய 4 அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து கண்காணிக்கப்படுகிறது.
ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குதல் மற்றும் குடோன்களில் இருந்து பெறுதல், சரியான விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுதல், சரியான நேரத்தில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொருட்கள் வழங்குவதை உறுதி செய்தல் உள்ளிட்டவைகளை இக்குழு கண்காணிக்கிறது. இதேபோல், திடீர் ஆய்வு பணிகளையும் இந்த குழு மேற்கொள்கிறது. அத்துடன் மாதம் தோறும் முதல் மற்றும் 3-வது திங்கட்கிழமைகளில் இந்த குழு கூடி, ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் வழங்குவதையும், சரியான நேரத்தில் மக்களுக்கு பொருட்கள் கிடைக்கிறதா? என்பதையும் ஆய்வு செய்து விவர அறிக்கையை உணவு வழங்கல் கமிஷனருக்கு அனுப்பி வருகிறது. இதனால் ரேஷன் கடைகளில் தவறுகள் நடக்க வாய்ப்புகள் இல்லை. தவறு நடந்தால் கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது. புகார் தெரிவிக்க வேண்டிய எண்கள் கடைகளிலேயே பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது' என்றனர்.
விற்பனையாளர்கள் புலம்பல்
எந்த ரேஷன்கடையிலும் பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்ற நடைமுறையால், குடியிருப்புக்கு அருகில் இருக்கும் ரேஷன்கடையில் மக்கள் பொருட்களை வாங்கி கொள்கின்றனர். இது பொதுமக்களுக்கு மிகவும் வசதியாக இருக்கிறது. அதேநேரம் ரேஷன்கார்டுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தான், பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதனால் பொருட்கள் விரைவில் தீர்ந்து பற்றாக்குறை ஏற்படுகிறது. அதன்மூலம் தேவையற்ற பிரச்சினை ஏற்படுகிறது.